2014-09-26 16:04:12

திருத்தந்தை : சிலுவையின்றி கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள இயலாது


செப்.26,2014. ஒரு கிறிஸ்தவர், மீட்பராம் கிறிஸ்துவை சிலுவையின்றி புரிந்துகொள்ள இயலாது, மேலும், இயேசுவோடு சிலுவையைச் சுமப்பதற்குத் தயாராக இல்லாமல் கிறிஸ்தவராக இருக்கவும் முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவராக இருப்பது என்பது, சிரேன் ஊர் சீமோன் போன்று சிலுவை சுமப்பதற்கு இயேசுவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகும் என்று விளக்கினார்.
தன்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என்று இயேசு தம் சீடர்களிடம் கேட்ட இந்நாளைய நற்செய்தியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, தமது உண்மையான தனித்துவத்தைச் சீடர்களும் மக்களும் புரிந்துகொள்வதற்கு அவர்களின் இதயங்களைத் தயார் செய்வதற்கு இயேசு இந்தப் போதனையைப் பயன்படுத்தினார் என்று கூறினார்.
இயேசுவோடு அவரது சிலுவையின் சுமையைத் தாங்கினால்தான் கிறிஸ்தவர் இயேசுவுக்கு உரியவர், மற்றபடி அக்கிறிஸ்தவர் பின்செல்லும் பாதை நல்லதாகத் தெரியும், ஆனால் அது உண்மையானதல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாவம் அசிங்கமானது, ஆனால் கடவுளின் அன்பு பெரியது, இவ்வன்புப் பாதையில் அவர் நம்மை மீட்கிறார் என்றும், சிலுவையை சுமப்பதற்குத் தமக்கு உதவுவதற்கு சிரேன்களாக இருப்பதற்கு நம்மைத் தயாரிக்கிறார் என்றும் இவ்வெள்ளி காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.