2014-09-25 15:48:18

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கான வாய்ப்புகள் இன்னும் தெரிகின்றன, அமெரிக்க ஆயர்கள்


செப்.25,2014. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கான வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக அண்மையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அமெரிக்க நாட்டு ஆயர்கள் குழு அறிவித்தது.
இந்த மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் இரு இனங்களுக்கும், மூன்று மதங்களுக்கும் இடையே தொன்மைகாலம்தொட்டே இந்நிலத்துடன் நெருங்கிய பிணைப்பு உள்ளது என்பதை எடுத்துரைத்த ஆயர்கள், அமைதியின் அடையாளமாக இருக்க வேண்டிய யெருசலேம் தற்போது முரண்பாடுகளின் அடையாளமாக இருப்பது குறித்த கவலையையும் வெளியிட்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் வேதனைகள் மற்றும் கவலைகளின் இரேகைகள் தெரிகின்றபோதிலும், நம்பிக்கைகளின் வெளிச்சக் கோடுகளும் நிரம்பிக் கிடக்கின்றன என உரைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், ஒருவர் மற்றவரின் தேவைகள் குறித்த அக்கறைக்குச் செவிசாய்க்கும் நிலை இப்பகுதியில் உருவாவதற்கு, உண்மையான மனமாற்றம் ஒவ்வொருவரிலும் தேவைப்படுகின்றது எனவும் கூறினர். மத்திய கிழக்குப் பகுதிக்கான தங்கள் ஆய்வுப் பயணத்தின்போது, அமெரிக்க ஆயர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் யூத, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.