2014-09-25 15:42:46

புனிதரும் மனிதரே : கைதிகளின் மீட்புக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்(St.Peter Nolasco)


8ம் மற்றும் 15ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய ஐரோப்பாவில் மூர்ஸ் எனப்படும் முஸ்லிம்களின் ஆதிக்கம் பரவி வந்தது. இதனால் கிறிஸ்தவ ஐரோப்பா அவர்களோடு தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. கிறிஸ்தவப் பகைவர்களைத் துன்புறுத்துவதற்காக மத்திய தரைக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களும் அதிகரித்திருந்தன. இக்காலத்தில் மூர்ஸ் இனத்தவர் கைதுசெய்த கிறிஸ்தவர்கள், போர்க் கைதிகளாக பண்டமாற்றுமுறையில் அடிமைகளாக வாங்கப்பட்டனர் மற்றும் விற்கப்பட்டனர். துறைமுகங்களில் அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அதோடு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ அடிமைகள் விசுவாசத்தை மறுதலிக்குமாறு பலவகைகளில் வதைக்கப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர். இதனால் இபேரியன் தீபகற்பத்தில் மூர்ஸ் இனத்தவருக்கு எதிராகப் போராடும் இராணுவத்தில், பீட்டர் நொலாஸ்கோ என்பவர் இளைஞராக இருக்கும்போதே சேர்ந்தார். அதோடு, Aragonனின் இளவயது அரசர் முதலாம் ஜேம்சுக்கு, கல்வி கற்றுக்கொடுக்கும் பணியாளராகவும் பீட்டர் நியமிக்கப்பட்டார். ஐரோப்பாவில் கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்கு துறவு சபை ஒன்றைத் தொடங்க வேண்டுமென பீட்டர், அரசரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். 1218ம் ஆண்டில், பீட்டர் நொலாஸ்கோ, அவருடைய ஆலோசகர் Raymond Penafort, அரசர் முதலாம் ஜேம்ஸ் ஆகிய மூவருக்கும் அன்னைமரியா காட்சியில் தோன்றி, கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்கு, தமது இரக்கத்தின் பெயரில் சபை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். பீட்டர் நொலாஸ்கோ தலைமையில், கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்காக, இரக்கத்தின் அன்னை துறவு சபை தொடங்கப்பட்டது. இச்சபையினர், 1218க்கும் 1632ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 4,90,736 அடிமைகளை மீட்டனர். 1787ம் ஆண்டுவரை ஒன்பது இலட்சம் அடிமைகளை இவர்கள் மீட்டனர். கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்காக, பீட்டர் நொலாஸ்கோவே இருமுறை ஆப்ரிக்கா சென்று கைதியாகப் பணியாற்றினார். கிரானாடாவுக்கும், வலென்சியாவுக்கும் இவர் ஒருமுறை பயணம் செய்தபோது மூர்ஸ் சிறையிலிருந்து ஏறக்குறைய 400 கிறிஸ்தவ அடிமைகளை மீட்டார் எனச் சொல்லப்படுகிறது. இஸ்பெயின் நாட்டவரான பீட்டர் நொலாஸ்கோ, 1256ம் ஆண்டு சனவரி 28ம் தேதி காலமானார். 1628ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் உர்பான் அவர்களால் பீட்டர் நொலாஸ்கோ புனிதராக உயர்த்தப்பட்டார். இவரின் விழா சனவரி 28. இரக்கத்தின் அல்லது உபகார அன்னை விழா செப்டம்பர் 24.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.