2014-09-24 15:27:58

வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதி


செப்.24,2014. நியுயார்க்கில் இச்செவ்வாயன்று நடந்த வெப்பநிலை மாற்றம் குறித்த ஒருநாள் உலக மாநாட்டில், உணவு உற்பத்தியை மேம்படுத்தல், 2020ம் ஆண்டுக்குள் காடுகள் அழிவைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தல் போன்றவைகளில் உடன்பாடுகள் எட்டப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைவிடப் பெரிய அளவைக்கொண்ட, அதாவது 35 கோடிக்கு மேற்பட்ட ஹெக்டேர் காடுகளையும், பயிர்நிலங்களையும் பாதுகாப்பதற்கு ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு சரியாகச் செயல்படுத்தப்பட்டால், 450 கோடி முதல் 880 கோடி டன்கள் வரையிலான கார்பன்டை ஆக்ஸைடு, 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் குறைக்கப்படும் என ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.
இன்னும், உலகின் உணவு தேவை 2050ம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில், வேளாண்துறையை மேம்படுத்தவும், அதேவேளை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
இவ்வுலக மாநாட்டில், 120 நாடுகளுக்கு மேற்பட்ட அரசுகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், நிதித்துறையினர், பொதுமக்கள் பிரதிநிதிகள் என, பலர் கலந்துகொண்டனர்.
உலக வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, 2020ம் ஆண்டுக்குள் 45 கோடி டன்கள் கார்பன்டை ஆக்ஸைடு ஆண்டுதோறும் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.