2014-09-24 15:10:56

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


செப்.24,2014. உரோம் நகரில் இப்புதன் அதிகாலையிலேயே மழை இலேசாகத் தூறத் துவங்கியது. அவ்வப்போது மழை தூறுவதும் பின் நிற்பதுமாக இடம்பெற்றுவந்த வேளையில், இந்நாளில் திருத்தந்தையின் புதன்மறையுரை தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறுமா அல்லது உள்ளரங்கில் இடம்பெறுமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், கூட்டத்தை மனதில்கோண்டு திருத்தந்தையின் புதன் மறையுரை தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற, மறையுரை நேரம் முழுவதும் மழை எவ்வித இடையூறும் செய்யாமல் அமைதி காத்தது உண்மையிலேயே இறைச் செயல்தான் எனக் கூறவேண்டும். இப்புதன் மறையுரைக்குச் செவிமடுக்கக் கூடியிருந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவும் இடம்பெற்றிருந்தது. கடந்த ஞாயிறன்று தான் மேற்கொண்ட அல்பேனிய நாட்டிற்கான ஒரு நாள் திருப்பயணம் குறித்து இப்புதன் மறையுரையில் தன் சிந்தனைகளை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஞாயிறன்று நான் அல்பேனிய நாட்டில் மேற்கொண்ட அப்போஸ்தலிக்கத் திருப்பயணம் அந்நாட்டு மக்களுடன் அகில உலகத் திருஅவையின் மற்றும் என்னுடைய நெருக்கத்தின் அடையாளமாக இருந்தது. கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் மனிதாபிமானமற்ற நிலைகளையும் கொண்ட இந்நாட்டின் முன்னாள் அரசால் இந்த நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக பெருமளவானத் துனபங்களை அனுபவித்துள்ளனர். ஆனால் இப்போதோ பொதுநலனுக்கான சேவையில், ஒருவர் ஒருவருக்கான மதிப்பும் ஒருவர் ஒருவருடனான ஒத்துழைப்பும் கொண்ட அமைதி சமூகத்தைக் கட்டியெழுப்ப உழைத்து வருகின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விடயம் என்னவெனில், அல்பேனியாவின் பல்வேறு சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் உணர்வுடன் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அமைதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் கடவுள் நம்பிக்கைகளுக்காக கடுமையான சிதரவதைகளை அனுபவித்தவர்கள். ஒவ்வொருவரின் தனித்தன்மையை மதித்து அதில் கட்டியெழுப்பபப்டும் இந்த முக்கிய சாட்சிய வாழ்விற்கு நான் என் திருப்பயணத்தின்போது ஊக்கமளித்தேன். இந்நாட்டின் ஆன்மீக மறுபிறப்பின் கனிகளை தங்கள் சித்ரவதைகள் மூலம் கொணர்ந்துள்ள கிறிஸ்தவ மறைசாட்சிகளின் வீரத்துவ சாட்சியத்திற்கு அல்பேனிய கத்தோலிக்க சகோதரர்களுடன் இணைந்து உயரிய கௌரவத்தை வழங்கினேன். அதேவேளை, அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் சமூகத்தின் ஒப்புரவு, பிறரன்பு, மற்றும் நன்மைத்தனத்தின் புளிக்காரமாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தேன். நல்லாலோசனை அன்னையின் செபங்கள் மூலமாக அல்பேனிய மக்கள், நீதியும் அமைதியும் ஒருமைப்பாடும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப இறைவன் தொடர்ந்து அவர்களைத் தூண்டுவாராக.
இவ்வாறு, தன் இப்புதன் பொதுமறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் துன்புறும் மக்களுக்காக அனைவரின் செபத்திற்கும் அழைப்புவிடுத்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.