2014-09-23 16:13:57

நீதி, அமைதியை உலகில் ஊக்குவிக்க யூதர்களுக்கு திருத்தந்தை அழைப்பு


செப்.23,2014. நீதியும் அமைதியும் அதிகமாகத் தேவைப்படும் ஓர் உலகில் அவற்றை ஊக்குவிப்பதில் யூதர்களும், கத்தோலிக்கரும் ஒன்றுசேர்ந்து உழைக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகின்ற நாள்களில் யூதர்கள் சிறப்பிக்கும் புத்தாண்டு மற்றும் பிற விழாக்களை முன்னிட்டு உரோம் யூதமத ரபி ரிக்கார்தோ தெ செஞ்ஞி அவர்களுக்குச் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உலகில் நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதில் யூதர்களும், கத்தோலிக்கரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு இறைவன் வரம் அருள்வாராக என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதர்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Rosh Hashana என்ற யூதர்களின் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 25,26 தேதிகளிலும், பிராயச்சித்த நாள் அக்டோபர் 4ம் தேதியும், கூடாரத் திருவிழா அக்டோபர் 9,10 தேதிகளிலும் சிறப்பிக்கப்படுகின்றன.
மேலும், “சமுதாயம் கடவுளை இழக்கும்போது, பொருளாதார வளமைகூட கடும் ஆன்மீக வறுமையால் இணைக்கப்படும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.