2014-09-23 16:13:34

திருத்தந்தை : குடியேற்றதாரரிடம் வெறும் சகிப்புத்தன்மையைக் காட்டினால் மட்டும் போதாது


செப்.23,2014. ஓர் உலகளாவியக் கூறாக மாறியிருக்கின்ற மக்களின் குடியேற்றம் முன்வைக்கும் சவால்களை, பரந்த பிறரன்புச் செயல்கள்மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார்.
2015ம் ஆண்டு சனவரி 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், குடியேற்றதாரர் விவகாரத்தை இன்னும் உறுதியான மற்றும் தெளிவான திட்டங்கள் மூலம் கையாளுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார் திருத்தந்தை.
இவ்வாறு செயல்படுவதன்மூலம், வெட்கமானதும் குற்றச்செயலுமான மனித வியாபாரம், அடிப்படை உரிமைகள் மீறப்படல், அனைத்துவிதமான வன்முறை, அடக்குமுறை மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் மேலும் சாரமுள்ள வகையில் ஈடுபடுவதற்கு உதவும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
குடியேற்றதாரர்மீது சகிப்புத்தன்மையைக் காட்டினால் மட்டும் போதாது, அவர்கள் வரவேற்கப்பட்டு, அவர்கள்மீது ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்தை, திருஅவை உலகெங்கும் பரப்புகிறது, திருஅவையின் இப்பணியில் யாருமே பயனற்றவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக அல்லது அந்நியராகப் பார்க்கப்படுவதில்லை என்றும் திருத்தந்தை தனது செய்தியில் கூறியுள்ளார்.
எனினும், குடியேற்றதார மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறை மற்றும் வறுமை வாழ்வை அறிவதற்கு முன்னரே, அவர்கள்மீது அடிக்கடி சந்தேகமும், வெறுப்பும் காட்டப்படுகின்றது, இதனை திருஅவை சமூகங்களில்கூட காண முடிகின்றது என்று எழுதியுள்ள திருத்தந்தை, இயேசு குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் ஏற்பதற்கு எப்பொழுதும் காத்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே உயிர்த்துடிப்பான ஒத்துழைப்பு நிலவினால் மட்டுமே குடியேற்றதாரர் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
"எல்லைகளற்ற திருஅவை, அனைவருக்கும் தாய்" என்ற தலைப்பிலான திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகிய இருவரும் இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.