2014-09-23 14:21:33

செப்டம்பர் 24, புனிதரும் மனிதரே - "பேராயருக்குரிய மதிப்பு, உடுத்தும் உடைகளால் வருவதில்லை"


1545ம் ஆண்டு, வலென்சியா (Valencia) உயர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேராயர் தாமஸ் அவர்கள் பொறுப்பேற்றபோது, மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அடுத்த 10 ஆண்டுகள், பேராயர் தாமஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்தில் அர்த்தமுள்ள பல மாற்றங்களைக் கொணர்ந்தார்.
எளிய வாழ்வை விரும்பிய பேராயர் தாமஸ் அவர்கள், தன் தோற்றத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. அவர் பேராயருக்குரிய உடைகளை அணியவேண்டும் என்று பேராயர் இல்லத்தில் இருந்த ஏனைய குருக்களும், அதிகாரிகளும் வற்புறுத்தினர். பேராயர் அவர்களிடம், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி. பேராயருக்குரிய மதிப்பு நான் உடுத்தும் உடைகளால் வருவதில்லை; என் வாழ்வால் வருவது" என்று அவர்களிடம் கூறியதோடு, தன் எளிய துறவற உடைகளையே தொடர்ந்து அணிந்துவந்தார்.
பேராயரின் முதல் பணி மக்களுக்குப் பணிபுரிவது என்பதில் தெளிவாக இருந்த அவர், மக்கள் தன்னை இரவு, பகல் எந்த நேரத்திலும் காண வரலாம் என்பதை அனைவரும் உணர வைத்தார். பேராயரின் இல்லம் தேடிவந்த வறியோருக்கு அவ்வில்லத்தில் உணவும், சிறிது பணமும் தவறாமல் கிடைத்தன.
தன் மறைமாவட்டத்தில் நெறிதவறி வாழ்ந்த அருள் பணியாளர்களை, பேராயர் இல்லத்திற்கு அழைத்து, அவர்களைத் தன்னுடன் சில நாட்கள் தங்கும்படி கேட்டுக் கொண்டார். பேராயர் தாமஸ் அவர்களின் புனித வாழ்வைக் கண்ட அருள் பணியாளர்கள் பலர், மனம் மாறியதாகச் சொல்லப்படுகிறது.
பத்து ஆண்டுகள் வலென்சியாவின் பேராயராகப் பணியாற்றிய பேராயர் தாமஸ் அவர்கள், 1555ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். Villanovaவின் புனித தாமஸ் அவர்களின் திருநாள் செப்டம்பர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.