2014-09-22 16:33:52

மதத்தின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்தாதீர்கள், திருத்தந்தை


செப்.22,2014. இத்திங்கள் காலையில் உலகின் நடப்புச் செய்திகளை வாசிக்க ஓர் ஊடகத்தைத் திறந்தவுடனே எதிர்ப்புப் போராட்டச் செய்திகள்தான் தடித்த எழுத்துக்களில் பதிவாகியிருந்தன. ஹாங்காங்கில் சீனா திணிக்க முயற்சிக்கும் தேர்தல் சீர்திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இன்னும், அகதிகள் துருக்கியில் மேலும் மேலும் நுழைவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர், சிரியா நாட்டு எல்லைகளில் சிலவற்றை இஞ்ஞாயிறன்று மூடியுள்ளனர் என்று மற்றொரு செய்தி அந்த ஊடகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த இரு நாள்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்து முப்பதாயிரம் குர்த் இன அகதிகள் துருக்கி நாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் ஏற்கனவே துருக்கியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டு அகதிகள் உள்ளனர். இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு எதிராகக் கிளர்ச்சி கிளம்பியதிலிருந்து நாட்டைவிட்டு வெளியேறியவர்கள். எனவேதான் துருக்கி இவ்வாறு எல்லைகளை மூடியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐஎஸ் இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் கிறிஸ்தவருக்கும், பிற சிறுபான்மை மதத்தவருக்கும் எதிராக நடத்திவரும் கடும் வன்முறைகளே அகதிகளின் அதிகரிப்புக்குக் காரணம். இந்த அமைப்பினரின் தீவிரவாதச் செயல்கள் கிறிஸ்தவ உலகத்தை மிகவும் கவலையடைய வைத்துள்ளது.
இந்தக் கவலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று மேற்கொண்ட அல்பேனிய நாட்டுத் திருப்பயணத்திலும் ஆழமாக, அழுத்தமாக எதிரொலித்தது. மதத்தின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்தாதீர்கள், வன்முறையையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தும் எந்த ஒரு சமயக் குழுவும் கடவுளின் சேனை என, தன்னை அறிவிக்க முடியாது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அருளாளர் அன்னை தெரேசா பிறந்த பூமியான அல்பேனியாவில், தனது ஒருநாள் திருப்பயணத்தை, அதுவும், 11 மணி நேரங்களே நடத்திய திருப்பயணத்தில் ஞாயிறு மாலையில் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளின் பெயரால் கொலைசெய்வது கடவுளுக்கு இழைக்கும் கடும் துரோகமாகும். மக்களை, கடவுளின் பெயரால் பாகுபடுத்துவது மனிதப்பண்பற்ற செயலாகும் என்று கூறினார். பல ஆண்டுகள் கம்யூனிச அடக்குமுறைக்கு உள்ளான அல்பேனியாவில் தற்போது மத சுதந்திரம் வழங்கப்பட்டு அனைத்து மதத்தினரும் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை உலகுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்று பாராட்டி, இந்நிலையில் தொடர்ந்து வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
பால்கன் நாடாகிய அல்பேனியாவில் 59 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியத் திருப்பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய விமானப் பயணத்தில், அல்பேனியாவில் உடன்பிறந்தோர் உணர்வைக் கட்டியெழுப்பும் சக்திபடைத்த உயர்வான கலாச்சாரம் இருக்கின்றது என்று கூறினார்.
அல்பேனியத் தலைநகர் திரானா பேராலயத்தில் ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருடன் இஞ்ஞாயிறு மாலையில் திருத்தந்தை திருப்புகழ்மாலை செபித்தபோது 84 வயது அருள்பணியாளர் Ernest Troshani Simoni, 85 வயது அருள்சகோதரி Maria Kaleta ஆகிய இருவரும் தங்களின் சிறைவாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இச்சகோதரி ஐந்து காய வரம் பெற்றவர். அருள்பணியாளர் Ernest Simoni பேசுகையில், எனது மணிக்கட்டுகளை இரும்புக் கைவிலங்குகளால் இறுக்கி ஏறக்குறைய நான் இறக்கும்நிலையில் கீழே தள்ளிவிட்டனர். வதைப்போர் தொழில் முகாம்களில் வேலைசெய்ய வைத்தனர். எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே என்று எனது சிறைச் சுவரில் எழுதி வைத்திருந்தேன். கிறிஸ்து பற்றிப் பேசுவதை நான் நிறுத்தவில்லை என்று சொல்லி ஏறக்குறைய நான் இறக்கும்நிலை வரும்வரை சித்ரவதைப்படுத்தினர். நிறைய அருள்பணியாளர்கள் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர் என்றார். இவ்வாறு இவர் தனது அனுபவங்களைக் கூறியபோது திருத்தந்தை எழுந்து சென்று அக்குருவின் கைகளை முத்தமிட்டு அவரது நெற்றியில் தனது நெற்றியை சிறிதுநேரம் வைத்துக்கொண்டு அமைதியாக நின்றார். பின்னர் 85 வயது அருள்சகோதரி Maria Kaleta பல ஆண்டுகள் வதைப்போர் தொழில் முகாம்களில் தண்டனை அனுபவித்தது பற்றி விளக்கினார். தனது துறவு இல்லம் மூடப்பட்டபோது எதிர்கொண்ட துன்பங்களையும், தனது சிறைவாழ்வில், கொலைக்கு அஞ்சாமல், தாய்மாரின் வேண்டுகோளின்பேரில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளித்ததையும் திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆவலாக இருந்ததையும் விவரித்தார்.
அல்பேனியாவின் 50 வருட கம்யூனிச ஆட்சியில் பல துன்பயியல் நிகழ்வுகள் நடந்துள்ளன. இச்செப வழிபாட்டில் மறையுரையாற்றுவதற்கென ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த உரையை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்நேரத்தில் எழுந்த தனது மனஉணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இதற்குப் பின்னர் திரானா, பெத்தனி மையத்தில் வாழும் சிறாரையும் சந்தித்தார். உதவி தேவைப்படும் மாற்றுத்திறானாளிகள் மற்றும் கைவிடப்பட்ட சிறார் பராமரிக்கப்படும் இந்த மையமானது, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தன்னார்வப் பணியாளர்களால் நடத்தப்படுகிறது. இவ்விடத்தில் உரையாற்றினார் திருத்தந்தை.
இச்சந்திப்பை முடித்து திரானா அனைத்துலக அன்னை தெரேசா விமான நிலையத்தில் அல்பேனியப் பிரதமர் எடி ராமா அவர்களுடன் சிறிதுநேரம் பேசிய பின்னர் உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 90 நிமிடங்கள் பயணம் செய்து ஞாயிறு இரவு 9.30 மணியளவில் உரோம் வந்தடைந்தார்.
1908ம் ஆண்டுமுதல் 1985ம் ஆண்டுவரை அல்பேனியாவில் சர்வாதிகார ஆட்சி செய்த கம்யூனிச அதிபர் என்வர் ஹோக்ஷாவின் ஆட்சி அந்நாட்டை மறைசாட்சிகளின் பூமியாக மாற்றியது. ஆனால் இன்று உலகுக்கே ஓர் எடுத்துக்காட்டாக அந்நாட்டில் பல சமயத்தவர் ஒன்றுசேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இறைநம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றாது என்பதற்கு இந்நாடு சான்றாக உள்ளது. நன்மை, தீமையை வெற்றிகொள்ளும் என்பதை திருத்தந்தையின் இப்பயணம் வலியுறுத்துகின்றது. இந்நாடு ஐரோப்பிய சமுதாய அவையில் முழு உறுப்பினர் ஆவதற்கு முயற்சித்து வருகின்றது. இம்முயற்சி திருவினையாகட்டும்.
நம்பிக்கை, நம்மை ஒருபோதும் ஏமாற்றாது. வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்குங்கள், தனிமனிதக் கோட்பாட்டின் வெற்று வாக்குறுதிகளும், தன்னலமும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியாது என அல்பேனிய இளையோருக்கு நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை. இந்த ஒரு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் திருத்தந்தையிடமிருந்து பெற்றுள்ள வருங்கால அல்பேனியாவுக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலம் அமையட்டும் என வாழ்த்துவோம்.
மதத்தின் பெயரால் வன்முறையை நியாயப்படுத்தாதீர்கள், வன்முறையையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தும் எந்த ஒரு சமயக் குழுவும் கடவுளின் சேனை என, தன்னை அறிவிக்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியாவில் கூறியவை, எட்ட வேண்டிய இதயங்களை எட்டித் தொடட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.