2014-09-21 15:41:06

திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணம் – திரானாவில் திருத்தந்தை


செப்.21,2014. கிறிஸ்தவ விசுவாசத்துக்காக உயிர்கொடுத்த எண்ணற்ற மறைசாட்சிகளைக் கொண்டுள்ள அல்பேனிய நாட்டுக்கு, அருளாளர் அன்னை தெரேசா பிறந்த பூமிக்கு, தனது முதல் திருப்பயணத்தை இஞ்ஞாயிறு காலை 7.30 மணிக்குத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பயணம், இத்தாலிக்கு வெளியே, ஐரோப்பாவில் திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருப்பயணம் மற்றும் அவரின் நான்காவது வெளிநாட்டு திருப்பயணமுமாகும். உரோம் ஃபியூமிச்சினோ அனைத்துலக விமானநிலையத்திலிருந்து A320 ஆல் இத்தாலியா விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், அங்கு இருந்த அனைத்துப் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார். இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களுக்கு வாழ்த்துத் தந்திச் செய்தியையும் அனுப்பினார். வழக்கமான தனது கருப்புநிறக் கைப்பையுடன் விமானத்தில் ஏறி பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, தன்னோடு பயணம்செய்த பத்திரிகையாளர்களிடம், “அல்பேனியா, அதிகமாகத் துன்புற்ற ஒரு நாடு, தற்போது அல்பேனியாவில் மதங்கள் மத்தியில் அமைதியான நல்லிணக்க நிலை காணப்படுவது உலகுக்கு ஒரு நல்ல அடையாளமாக இருக்கின்றது, அரசு நிர்வாகத்துக்குச் சாதகமான உரையாடலும், அமைதியும் காணப்படுவது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றது” என்று கூறினார். விமானத்திலே காலை உணவை முடித்து, ஒரு மணி 30 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து அல்பேனியத் தலைநகர் திரானா, அன்னை தெரேசா அனைத்துலக விமானநிலையத்தை 9 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை.
அல்பேனியப் பிரதமர் Edi Rama, இன்னும் பிற அரசு பிரமுகர்களும் தருஅவைத் தலைவர்களும் திருத்தந்தையை வரவேற்றனர். விமானநிலைய பிரமுகர்கள் அறையில், திருத்தந்தையும், பிரதமரும் சிறிதுநேரம் உரையாடிய பின்னர், அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அல்பேனிய அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. சாலையின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் வத்திக்கான் மற்றும் அல்பேனிய நாடுகளின் கொடிகளை வைத்துக்கொண்டு திருத்தந்தை வாழ்க, திருத்தந்தை வாழ்க என்று சப்தமாக குரல் எழுப்பினர். 1967ம் ஆண்டில் அல்பேனியாவை உலகின் முதல் நாத்திக நாடாக அறிவித்த, கம்யூனிசக் கொள்கையுடைய சர்வாதிகாரி Enver Hoxhaவின் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் கொல்லப்பட்ட நாற்பது மறைசாட்சி அருள்பணியாளர்களின் படங்களை, திருத்தந்தையின் வாகனம் சென்ற நெடுஞ்சாலையில் அதிகமாகக் காண முடிந்தது. இவரது ஆட்சியில் நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களும், முஸ்லிம் போதகர்களும் தூக்கிலிடப்பட்டனர் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாகினர். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில் 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் இருந்தனர்.
அரசுத்தலைவர் மாளிகை சென்ற திருத்தந்தைக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ட பின்னர் இரு நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. திருத்தந்தை, வரவேற்பறையில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அரசுத்தலைவர் Bujar Nishani அவர்களைத் தனியே சந்துத்துப் பேசினார். அதன்பின்னர் அரசுத்தலைவர் தனது குடும்பத்தினரைத் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பரிசுப்பொருள்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அம்மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முன்னாள் அரசுத்தலைவர், முன்னாள் பிரதமர் உட்பட அரசு மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முதலில் அரசுத்தலைவர் Bujar Nishani திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களின் ஆன்மீகத்தைக் கொண்டுள்ள நாடு அல்பேனியா. தேசிய அளவில் மனச்சாட்சியுடன் வாழும் நாடு இது. இங்கு வன்முறையோ, பயங்கரவாதமோ கிடையாது. இந்நாட்டின் 50வருட கம்யூனிச ஆட்சியில் கொல்லப்பட்ட அருள்பணியாளர்கள் உயிர்பிரிவதற்கு முன்னர் வாழ்க அல்பேனியா, வாழ்க திருத்தந்தை என்று சொல்லிக்கொண்டே இறந்தனர். நூற்றாண்டுகளில் பல மறைசாட்சிகளையும் புனிதர்களையும் கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கியுள்ளது இந்நாடு. இங்கு கத்தோலிக்கத் தலைவர்கள் நல்மதிப்புடன் வாழ்கின்றனர். நாங்கள் அன்னை தெரேசாவின் மக்கள். கடந்த 24 ஆண்டுகளாக சுதந்திர வாழ்வில் முன்னேறி வருகிறது. திருத்தந்தையே உங்கள் வருகைக்கு நன்றி...
இன்னும் பல செய்திகளைக் கொண்ட அரசுத்தலைவரின் இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அல்பேனிய நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.
இந்த முதல் நிகழ்ச்சிக்குப் பின்னர், அங்கிருந்து 800 மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அன்னை தெரேசா வளாகத்துக்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. இவ்வளாகத்தில் பெருவெள்ளமெனத் திரண்டிருந்த மக்களை வாழ்த்தி, சிறாரை முத்தமிட்டு திருப்பலி மேடை சென்று திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.
இலத்தீன் மொழியில் இஞ்ஞாயிறு திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, இத்தாலியத்தில் மறையுரையாற்றினார்.
இத்திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரையாற்றி, மூவேளை செபமும் சொன்னார் திருத்தந்தை. இச்செப உரையில் இளையோருக்குச் சிறப்பாக செய்தி சொன்னார் திருத்தந்தை.
மூவேளை செப உரையாற்றி எல்லாரையும் ஆசீர்வதித்து அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அல்பேனியத் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அல்பேனிய ஆயர்கள் மற்றும் திருத்தந்தையுடன் சென்றவர்கள் இம்மதிய உணவில் கலந்துகொண்டனர். சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு மாலை 4 மணியளவில் திரானா நல்லாலோசனை அன்னைமரியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் சென்றார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் இஞ்ஞாயிறு இரவு 7.30 மணியாகும். இப்பல்கலைக்கழகத்தில் ஆறு முக்கிய சமய மற்றும் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. 32 இலட்சத்து 50 ஆயிரம் மக்களைக் கொண்ட அல்பேனியாவில் முஸ்லிம்கள் 56.4 விழுக்காட்டினர். கத்தோலிக்கர் 15.9 விழுக்காட்டினர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் 6.8 விழுக்காட்டினர், சூஃபி இஸ்லாம் மதத்தைச் சார்ந்த bektashi 2.1 விழுக்காட்டினர், பிற மதத்தவர் 5.7 விழுக்காட்டினர், எந்த மதங்களையும் சாராதவர்கள் 16.2 விழுக்காட்டினர். கடந்த 24 ஆண்டுகளாக மத சுதந்திரத்தை அனுபவித்து, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் இந்நாட்டின் பல்சமய மற்றும் பல கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை ஒன்றும் ஆற்றினார்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருடன் மாலை திருப்புகழ்மாலை செபிப்பது, திரானா பெத்தானியா இல்லத்தில் மாற்றுத்திறானாளிச் சிறாரைச் சந்திப்பது, திரானா அன்னை தெரேசா விமான நிலையத்தில் அல்பேனிய மக்களின் பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்துகொள்வது திருத்தந்தையின் இந்த 11மணி நேரங்கள் கொண்ட இத்திருப்பயணத் திட்டத்தில் உள்ளன. இந்நிகழ்வுகள் குறித்து இத்திங்கள் மாலை, செவ்வாய் காலை ஒலிபரப்புகளில் அன்பு நேயர்களுக்கு வழங்குகிறோம்.
நன்மை தீமையை வெற்றிகொள்ளும் என்பதை திருத்தந்தையின் இப்பயணம் வலியுறுத்துகின்றது அந்நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் ரமிரோ மோலினெர் இங்லெஸ் கூறியுள்ளார். அருளாளர் அன்னை தெரேசா பிறந்த அல்பேனியா தொடர்ந்து அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழட்டும் என நாமும் வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.