2014-09-21 15:40:13

திருத்தந்தை : மதவிடுதலை இல்லாதபோது அங்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் இல்லாமல்போகிறது


செப்.21,2014. மதங்கள் அனைத்தும் இங்கு ஒன்றுகூடியிருப்பது, பொதுநலனுக்கான சகோதரத்துவ மற்றும் ஒத்துழைப்பின் தளைகளைக் கட்டியெழுப்ப உதவும் கலந்துரையாடலின் அடையாளமாகும்.
கடவுளை மறுத்த கொள்கைகள், மனிதரின் உரிமைகளையும் மாண்பையும் மீறுவதற்கு இட்டுச்செல்வதைக் கண்டுள்ளோம். ஏனெனில், மதவிடுதலை இல்லாதபோது அங்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் இல்லாமல்போகிறது.
ஆனால், 1990ம் ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ள மதவிடுதலை, நாட்டின் பொதுநலனிற்கு சிறப்புப் பங்காற்றியுள்ளது. பொருளாதார மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவியுள்ளது. சர்வாதிகாரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி மனிதகுல சகோதரத்துவத்திற்கு பணியாற்றுவது மதவிடுதலையே. சகிப்பற்றத்தன்மைகளை ஒதுக்கித் தள்ளி, பலன் தரும் பேச்சுவார்த்தைகளை கட்டியெழுப்ப உண்மையான மதவிடுதலையே உதவும். ஏனைய மத நம்பிக்கையுடையோருடன் சகிப்புத்தன்மையுடன் வாழப் பழகவேண்டும். இல்லையெனில் இன்று பல நாடுகளில் இடம்பெறும் மோதல்கள் தொடரும் நிலையே உருவாகும். மதங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது கடவுளுக்கும் மனித குலத்திற்கும் ஏற்புடையதல்ல என்பதை உணர்ந்து அதனை எதிர்க்க வேண்டும். உண்மையான மதம் என்பது அமைதியின் ஆதாரம். இறைவன் பெயரால் வன்முறைகளை நிகழ்த்த எவருக்கும் உரிமையில்லை. இறைவன் பெயரால் பாகுபாட்டுடன் எவரும் நடத்தப்படுவது மனிதத்தன்மையேயல்ல.
மதவிடுதலை என்பது அனைவராலும் ஒன்றிணைந்து உருவாக்கப்படவேண்டியது. இவ்வுலக வாழ்வில் ஒருவரின் உதவி, ஒத்துழைப்பு மற்றவருக்குத் தேவை என்பதை முதலில் நாம் உணரவேண்டும். அதேவேளை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுநலனுக்காக உழைக்க வேண்டிய கடமையையும் உணரவேண்டும். ஏழைகளின் சமூக நீதிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உழைக்கவேண்டிய கடமை அனத்துமதத்திற்கும் உள்ளது. ஆகவே, அன்பு நண்பர்களே! உங்களிடையேயான நல்லுறவுகள் தொடர்ந்து இடம்பெறட்டும். இதன் வழி, நாட்டிற்கானச் சேவையில் ஒன்றிணைந்து செயல்படுங்கள், என அனைத்து மதத்தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.