2014-09-21 12:45:59

திருத்தந்தை : மதங்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழமுடியும், அது இயலக்கூடியதே


செப்.21,2014. நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரையேத் தியாகம் செய்த மக்களையும், சித்ரவதைகளின் காலத்தின்போதுகூட, தங்கள் விசுவாசத்தின் சாட்சியாக விளங்கிய கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களையும்கொண்ட இந்த உன்னத நாட்டிற்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மையான விடுதலையை அடைந்துள்ள கடந்த 25 ஆண்டுகளில் பொருளாதார மற்றும் மறுகட்டமைப்புப் பணிகள் துவங்கியுள்ளன. இந்த ஆண்டுகள், வருங்காலம் குறித்த நம்பிக்கையையும், அண்டை நாடுகளுடனான நட்பையும் வளர்க்க உதவியுள்ளன.
மதசுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவைகளை உள்ளடக்கிய மனித உரிமைக்கான மதிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளீர்கள். இது பொதுநலனுக்காக இணைந்து உழைப்பதற்கு ஊக்கமூட்டுவதாகும். இங்கு பல மதங்களின் ஒன்றிணைந்த வாழ்வு பெருமகிழ்ச்சி தருவதாக உள்ளது. எவரும் ஆயுதங்களையும் வன்முறைகளையும் கையிலெடுத்து, தங்களைக் கடவுளின் காவலர்கள் என எண்ணாதிருக்கட்டும். மக்களின் மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் மீறுவதற்கு மதத்தின் பெயரை எவரும் பயன்படுத்தாதிருக்கட்டும்.
மதங்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழமுடியும், அது இயலக்கூடியதே என்பதை அல்பேனிய நாடு நிரூபித்து வருகிறது. மதங்கள் ஒன்றிணைந்து வாழ்வது அமைதிக்கும் மனிதகுல வளர்ச்சிக்கும் உதவும் ஒன்றாகும். வேறுபாடுகளையும், தனித்தன்மைகளையும் மதித்து ஏற்பதுடன் அவைகள் ஊக்கமூட்டப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும்.
இந்த நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை, தன் வழிபாட்டுத்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பிவருவதுடன், அனைத்து மக்களுக்கும் பலன்தரும் வகையில் கல்விக்கூடங்களையும் நல மையங்களையும் கட்டி சேவையாற்றிவருகிறது. ஏனைய மறைசாட்சிகளுடன் இணைந்து அன்னை தெரேசா, இந்நாட்டின் வளர்ச்சிகண்டு மகிழ்ந்துகொண்டிருக்கிறார். இந்நாட்களில், பொருளாதார முன்னேற்றமென்பது, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பது உறுதி செய்யப்படவேண்டும். அது ஏழைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆன மதிப்பை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். உலகமயமாக்கல் என்பது ஒருமைப்பாட்டின் உலக மயமாக்கலுக்கு இணையாக நடைபோடுவதாக இருக்கவேண்டும். இத்தகைய சவால்களை ஏற்று சமாளிக்கும் நிலையில் சுதந்திர அல்பேனியா உள்ளது என்று பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியின் அருளை வேண்டி, அல்பேனிய நாட்டிறகான தன் முதல் உரையை நிறைவுசெய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.