2014-09-21 15:42:36

திருத்தந்தை : இளையோரே, கிறிஸ்துவின்மீது உங்கள் வாழ்வை கட்டியெழுப்புங்கள்


செப்.21,2014 அல்பேனியாவிலிருந்தும், அதன் அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் இத்திருப்பலியில் கலந்துகொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களின் விசுவாச சாட்சியத்துக்கும் நன்றி. சிறப்பான விதத்தில் இளையோரை வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் வாழ்வை இயேசு கிறிஸ்துவின்மீது கட்டியெழுப்புங்கள். கிறிஸ்துவில் வாழ்வை அமைப்பதென்பது, பாறையின்மீது கட்டுவதாகும். ஏனெனில் நாம் சிலவேளைகளில் விசுவாசத்தை இழந்திருந்தாலும் அவர் எப்போதும் பிரமாணிக்கமுள்ளவர். வேறுயாரையும்விட நம்மை அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பவர் இயேசு. நாம் பாவம் செய்யும்போது நம்மைக் கண்டனம் செய்யாமல், போ, இனிமேல் பாவம் செய்யாதே என்று அவர் சொல்கிறார். அன்பு இளையோரே, நீங்கள் அல்பேனியாவின் புதிய தலைமுறை. பணத்தை வழிபடுவதற்கும், தனிமனிதக்கோட்பாட்டின் போலிச் சுதந்திரத்துக்கும், போதைக்கும், வன்முறைக்கும், நீங்கள் மறுப்புச் சொல்வது எப்படி என, நற்செய்தியின் சக்தி மற்றும் மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டினால் அறிந்திருக்கிறீர்கள். அதேநேரம், சந்திப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்துக்கும், நன்மை மற்றும் உண்மையிலிருந்து பிரிக்கமுடியாத அழகுக்கும், மிகுந்த ஆர்வத்தோடு வாழ்வை வாழ்வதற்கும், சிறிய காரியங்களில் விசுவாசமாய் இருப்பதற்கும், ஆம், ஆகட்டும் என, எப்படி சொல்வது எனவும் அறிந்திருக்கிறீர்கள். இவ்வாறு நடப்பதன்மூலம் நீங்கள் நல்லதோர் அல்பேனியாவையும், நல்லதோர் உலகையும் அமைப்பீர்கள். நல்லாலோசனை அன்னை என்ற பெயரில் வணங்கப்படும் அன்னைமரியாவிடம் அல்பேனியாவிலுள்ள திருஅவை முழுவதையும் நாட்டையும், இந்நாட்டின் குடும்பங்கள், சிறார், முதியோர் என அனைவரையும் அர்ப்பணிக்கின்றேன். நம்மை ஏமாற்றாத நம்பிக்கை நோக்கி கடவுளோடு நீங்கள் ஒன்றிணைந்து நடப்பதற்கு நம் தாய் அன்னைமரியா உதவுவாராக.
இவ்வாறு திரானா அன்னை தெரேசா வளாக்த்தில் மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.