2014-09-21 15:43:40

அல்பேனியா, ஓர் கண்ணோட்டம்


செப்.21,2014. தென்கிழக்கு ஐரோப்பாவில், வடமேற்கே மோந்தேநெக்ரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாசிடோனியா, தெற்கிலும் தென்கிழக்கிலும் கிரீஸ் ஆகிய குடியரசுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள சிறிய நாடு அல்பேனியா. மேற்கே அட்ரியாட்ரிக் கடலையும், தென்மேற்கே இயோனியன் கடலையும் கடற்கரைப் பகுதிகளாகவும் இந்நாடு கொண்டுள்ளது. கி.மு167 முதல் கி.பி.395 வரை உரோமையர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது உட்பட இந்நாடு பல்வேறு இனத்தவரின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியது. பின்னர் 1400களில் ஒட்டமான்கள் இந்நாட்டைக் கைப்பற்றியதற்குப் பின்னர் பிற நாடுகளின் ஆக்ரமிப்பு எட்டாக்கனியானது. ஒட்டமான் துருக்கியர்களின் ஆதிக்க காலம், அல்பேனிய வரலாற்றில் மிக இருண்ட காலம். இந்த ஆக்ரமிப்பை ஏற்கமுடியாத பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். தங்கள்மீது திணிக்கப்பட்ட மதமாற்றத்தைப் பலர் கட்டாயமாக ஏற்று முஸ்லிம்களாக மாறினர். பொருளாதார மற்றும் சமூக ஆதாயங்களுக்காக, பலர் மதம் மாறினர். இந்நிலை 1912ம் ஆண்டுவரை நீடித்தது. இந்நாடு 1912ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி விடுதலையடைந்தது. இதன் 102ம் ஆண்டு நிறைவு வருகிற நவம்பரில் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.
ஒட்டமான் துருக்கியர்கள் அல்பேனியாவை விட்டுச் சென்ற பின்னரும் அரசியல் பதட்டநிலை தொடர்ந்தது. 1939ல் இத்தாலியின் முசோலினி, அல்பேனியாவை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார். இரண்டாம் உலகப் போர் தொடங்கி நடந்தபோது, பாசிசக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் மற்றும் சோசலிசக் கொள்கையாளர்கள் ஒன்று சேர்ந்து 1944ல் கம்யூனிசக் கட்சியை உருவாக்கினர். இந்நாடு, சீனாவுடனும் நல்லுறவைக் கொண்டிருந்தது. ஆனால் சீனா மேற்கத்திய உலகோடு தொடர்பை ஏற்படுத்தத் தொடங்கியவுடன் 1975ல் அவ்வுறவையும் துண்டித்துக் கொண்டது அல்பேனியா. 1908ம் ஆண்டுமுதல் 1985ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சி செய்த அதிபர் என்வர் ஹோக்ஷாவின் ஆட்சியில் துன்புற்ற ஆயர் பிரேனுஷி சொல்கிறார் - இந்தக் கம்யூனிச சர்வாதிகாரம், ஐம்பது ஆண்டுகளுக்கு முழு உலகிலுமிருந்து இந்நாட்டை தனிமைப்படுத்தியது என்று. அல்பேனியாவில் கம்யூனிச சர்வாதிகார காலத்தில் பிறந்து வளர்ந்த அருள்சகோதரி மிர்ரா மேலும் பல கொடுமைகளை வத்திக்கான் வானொலியில் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு கலாச்சாரமும் அறிவாற்றலும் சோசலிஷக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவை கொடுமையாய் நசுக்கப்பட்டது. வதைப்போர் முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆட்சியில் துன்புற்றவர்களில் ஒருவர் இயேசு சபை அருள்பணியாளர் Anton Luli. 1910ம் ஆண்டில் அல்பேனியாவில் பிறந்த இவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட சமயம் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தது. அரசுக்கு எதிராக இவர் பிரச்சாரம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு 1947ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி கைதுசெய்யப்பட்டார். 17 ஆண்டுகள் சிறையில் இருந்து, அவற்றில் பல ஆண்டுகள் வதைப்போர் முகாம்களில் வைக்கப்பட்டார். கடும் குளிர் வாட்டும் டிசம்பரில் மலைப்பகுதி ஒன்றில் கழிவறைகளைக் கழுவும் வேலைகளை 9 மாதங்கள் செய்தார். கிறிஸ்மஸ் இரவு அன்று அவர் வெற்று உடம்போடு தொங்கவிடப்பட்டு தோல்பட்டைகளுக்குக் கீழ் நீளக் கயிற்றைக் கட்டியிருந்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் கத்தியவுடன் இவரை அகற்றியுள்ளனர். 1989ம் ஆண்டில் பொது மன்னிப்பின்கீழ் விடுதலை பெற்றவர் இவர். பின்னர் ஒருமுறை தன்னைத் துன்புறுத்தியவரை சாலையில் சந்தித்தபோது அவரை அணைத்து முத்தமிட்டதாக இக்குருவே சொல்லியிருக்கிறார். இவ்வாறு பல கடும் கொடுமைகளை அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் அனுபவித்தனர். எனினும் இந்நாட்டில் 1991ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் சுதந்திரத் தேர்தல்கள் நடந்தன. தற்போது இந்நாட்டில் சுதந்திரக் காற்று வீசுகிறது. பல மதத்தவரும் நல்லிணக்கத்துடன் அமைதியில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.