2014-09-20 15:57:38

மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.


செப்.20,2014. அவதூறு, பாகுபாடு, புறக்கணிப்பு, பலிகடாவாக ஆக்கப்படுதல் போன்றவற்றால் மனத்தளர்ச்சியடைந்து மூளைப் பாதிக்கப்பட்டுள்ள முதியோருக்கு பாதுகாப்புகள் அதிகம் தேவை என்று ஐ.நா. வல்லுனர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 21, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கூறிய ஐ.நா. வல்லுனர் Rosa Kornfeld-Matte அவர்கள், மனத்தளர்ச்சியால் மூளை பாதிக்கப்பட்ட வயதானவர்கள் மற்றும் அவர்களுக்குப் பணிசெய்வோர் எழுப்பும் குரல்கள் உலகில் கேட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அல்சைமர் மற்றும் இந்நோய் தொடர்புடைய பிரச்சனைகளால் துன்புறும் முதியோர், அனைத்துச் சூழல்களிலும் தங்களின் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உரிமை கொண்டுள்ளனர் என்றும் Kornfeld-Matte கூறியுள்ளார்.
தற்போது உலகில் 3 கோடியே 56 இலட்சம் பேர் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை 2030ம் ஆண்டில் இரு மடங்காகவும், 2050ம் ஆண்டில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.
அனைத்துலக அல்சைமர் தினம், 1994ம் ஆண்டில், 84 அல்சைமர் நோய்ப் பராமரிப்புக் கழகங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பினால் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.