2014-09-20 15:51:39

பிறரின் பாதங்களைக் கழுவத் தெரிந்த ஆயர்கள் திருஅவைக்குத் தேவை


செப்.20,2014. அண்மைக் காலங்களில் ஆயர்களாக நியமனம் செய்யப்பட்ட 120 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறர்முன் முழந்தாளிட்டு அவர்களின் காலடிகளை எவ்வாறு கழுவுவது என்பதைத் தெரிந்துவைத்துள்ள ஊழியர்-ஆயர்கள் இன்றையத் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயம் நடத்திய இருவாரப் பயிற்சியில் இந்த ஆயர்கள் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, பல்வேறு காரணங்களால் இப்பயிற்சியில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்ற புதிய ஆயர்களுக்குத் தனது சகோதரத்துவ வாழ்த்தையும் ஆசீரையும் தெரிவிப்பதாகக் கூறினார்.
சீனாவில் அண்மை ஆண்டுகளில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்கள் இன்று உங்களோடு இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், ஆனால் அந்த நாள் வெகுதொலைவில் இருக்காது என எனது இதயத்தின் ஆழத்தில் ஆவல்கொள்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.
சீன ஆயர்களுடன் தனது ஒருமைப்பாட்டை மட்டுமல்லாமல், உலகளாவிய ஆயர்கள் பேரவைகளின் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, சிலவேளைகளில் அவர்கள் தனிமையை உணரலாம், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் அவர்களைச் சார்ந்த விசுவாசிகளுக்கும், குடிமக்களுக்கும், அகிலத் திருஅவைக்கும் நற்கனியைக் கொடுக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்.
குடும்பம் குறித்த உலக ஆயர் பேரவை தொடங்கவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்காகச் செபிக்குமாறும், நற்செய்திப்பணியின் அடித்தளமாக இருக்கும் குடும்பங்களுக்கு ஆயர்கள் தங்களின் மேய்ப்புப்பணிகளில் முக்கியத்துவம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
உலகுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு ஆயர்கள் ஆற்றும் பணிக்கு இயேசுவின் திருவார்த்தையை அடித்தளமாக அமைக்குமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்திய ஆயர்கள் 15 பேர் உட்பட பல வளரும் நாடுகளின் 120 ஆயர்களுக்குத் திருத்தந்தை கூறவிரும்பிய கருத்துக்கள் அடங்கிய உரை ஒவ்வோர் ஆயரிடம் கொடுக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.