2014-09-20 15:52:06

செபம் இல்லாத நற்செய்தி அறிவிப்பு மனிதரின் இதயத்தைத் தொடாது, திருத்தந்தை


செப்.20,2014. எந்தவித வழிகாட்டுதலோ, பாதுகாப்போ இன்றி உலகை வலம்வரும் வறியோர், களைத்திருப்போர் மற்றும் நம்பிக்கையிழந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல் அதிகம் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
காயமடைந்தவர்கள் மற்றும் புண்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ள மருத்துவமனையில் வேலைசெய்வது போன்றது திருஅவையின் பணி என்றுரைத்த திருத்தந்தை, புண்பட்ட பலருக்கு நெருக்கமாக நாம் இருக்க வேண்டுமென்று விரும்பப்படுகிறோம் என்று கூறினார்.
“நற்செய்தியை மகிழ்ச்சியோடு அறிவிப்பது குறித்த மேய்ப்புப்பணி திட்டங்கள்” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை இவ்வெள்ளி மாலை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
திருஅவையின் முக்கிய பணி நற்செய்தியை அறிவிப்பதாகும், குறிப்பாக, கிறிஸ்துவும் அவரது நற்செய்தியும் அதிகமாகத் தேவைப்படும் மக்களுக்கு அறிவிப்பதாகும் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்வோம், நற்செய்தியை விதைத்து அதற்குச் சான்றுகளாகவும் வாழ்வோம் எனவும் கூறிய திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதற்கு இறைநம்பிக்கையும், செபமும், தியானமும் தேவை என்றும் கூறினார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இக்கருத்தரங்கில், ஆயர்கள், துறவிகள், பொதுநிலையினர் என அறுபது நாடுகளின் இரண்டாயிரத்துக்கு அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.