2014-09-20 15:57:31

அமைதியான உலகத்தைக் கற்பனை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது


செப்.20,2014. பயங்கரவாதத்தின் நெருப்பை அணைத்து மோதல்களின் ஆணிவேர்களைப் பிடுங்கி எறிவதற்காக நாம் உழைக்க வேண்டுமென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 21, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக அமைதி நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், போரிடும் அனைவரும் ஆயுதங்களைக் களைவதன்மூலம் அனைவரும் அமைதியின் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று சொல்லி ஆயுதக் களைவுக்கு அழைப்புவிடுத்துள்ளார் பான் கி மூன்.
உலகினர் அனைவரும் இஞ்ஞாயிறு நண்பகலில் ஒரு நிமிடம் மௌனம் காத்து, மனிதக் குடும்பத்துக்கு அமைதி எவ்வளவு முக்கியம் என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறும் கேட்டுள்ளார் பான் கி மூன்.
“அமைதியில் வாழ்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமை” என்ற தலைப்பில் 2014ம் ஆண்டின் அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்படுகிறது. “அமைதியில் வாழ்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமை” குறித்து ஐ.நா.பொது அவை அறிக்கை வெளியிட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு இந்த 2014ம் ஆண்டில் இடம்பெறுவதையொட்டி இத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. தலைமையகத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அமைதி மணி, இவ்வுலக நாளன்று ஆண்டுதோறும் அடிக்கப்படுகிறது. இம்மணியை ஜப்பான் நாடு ஐ.நா.வுக்குப் பரிசாக வழங்கியது.
அனைத்துலக அமைதி நாள் 1981ம் ஆண்டில் ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.