2014-09-19 15:45:56

திருத்தந்தை : கிறிஸ்தவத் தனித்துவம் உயிர்ப்பில் முழுமையடைகின்றது


செப்.19,2014. கிறிஸ்தவத் தனித்துவத்தின் சாரமே, நாம் உடலோடும் ஆன்மாவோடும் ஆண்டவரோடு இருப்பது, நம் உடல்களின் உயிர்ப்போடு கிறிஸ்தவத் தனித்துவத்தும் முழுமையடைகின்றது என்று, இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலில்(15,12-20) கிறிஸ்தவர்களின் உயிர்ப்புப் பற்றி விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து, மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவத் தனித்துவம் ஒரு பயணம், அது ஒரு பாதை, அதில் எம்மாவுஸ் சீடர் போன்று நாமும் ஆண்டவரோடு இருக்கிறோம் என்று கூறினார்.
நம் வாழ்வு முழுவதும் ஆண்டவரோடு இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கொரிந்தியர்கள் உயிர்ப்பைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களையும் எடுத்துச் சொன்னார்.
உடலின் உயிர்ப்பைப் பற்றிய கிறிஸ்தவப் போதனை ஏத்தென்ஸ் கிரேக்கர்களுக்கும் ஞானமுள்ள மெய்யிலாளர்களுக்கும் துர்மாதிரிகையாய் இருந்தது, கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனில், உங்கள் மத்தியில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர்கள் இல்லை என எப்படிச் சொல்ல முடியும்? என புனித பவுல் கேள்வி எழுப்பியதையும் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனில், இறந்தவர்களும் உயிர்த்தெழுவார்கள், உயிர்ப்பில் நாம் மாற்றம் அடைகிறோம், இம்மாற்றம் நம் கிறிஸ்தவப் பயணத்தின் இறுதியாக இருக்கும் என்றும் திருத்தந்தை தனது மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.