2014-09-19 15:51:34

செப்.20,2014. புனிதரும் மனிதரே : துணியை விட்டு ஓடியவரே துணிவுமிக்கவரானார்( St.Mark)


நற்செய்தியாளரும், புனித பேதுருவின் நெருங்கிய உதவியாளரும், அலெக்சாந்திரியத் திருஅவையை நிறுவியவரும், அதன் முதல் ஆயருமான புனித மாற்கு, புனிதர்கள் பவுல் மற்றும் பர்னபாசின் நற்செய்தி அறிவிப்புப் பயணத்தின்போது இணைந்து பணியாற்றியவர். புனித மாற்குவின் தாய் தன் எருசலேம் வீட்டை ஆதிகாலக் கிறித்தவர்க்களின் பயன்பாட்டிற்கென வழங்கியவர். புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலோடு உரோம் நகருக்கு வந்தவர் புனித மாற்கு. இயேசுவோடு உடனிருந்த புனித பேதுருவின் வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு நற்செய்தி நூலை எழுதினார் இப்புனிதர். நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.
மாற்கு நற்செய்தி 14:51-52ல் கூறப்பட்டுள்ளபடி, கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்டப் பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவராக இருக்கலாம் என்பது மரபு; இயேசுவைக் கைது செய்தவர்கள் இவரைப் பிடித்தபோது தம் வெறும் உடம்பின்மீது இருந்த நார்ப்பட்டுத் துணியை விட்டுவிட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார். இவர் இயேசுவின் எழுபது சீடர்களுள் ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுள் ஒன்றான அலெக்சாந்திரியத் திருஅவையின் நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.
வரலாற்றாசிரியரான யுசிபசின் கூற்றுப்படி, அனனியாசு என்பவருக்குப் பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் அலெக்சாந்திரியாவின் ஆயரானார் மாற்கு. பாரம்பரியப்படி, கி.பி 68ல் இவர் மறைசாட்சியாக இறந்தார் என்பர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி









All the contents on this site are copyrighted ©.