2014-09-19 15:46:18

அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து அக்களிப்பு


செப்.19,2014. அமைதி மற்றும் இலங்கையின் திருத்தூதராக நோக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து இலங்கை ஆயர்கள் தங்களின் பெருமகிழ்வை வெளியிட்டுள்ளனர்.
அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய கண்டி ஆயர் வியான்னி பெர்னான்டோ அவர்கள், முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் ஆவல் நிறைவேறியிருக்கும்போது அது பற்றி என்ன சொல்வது என்று, தனது மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.
திருப்பீடம் வெளியிட்டுள்ள இச்செய்தி, இலங்கையின் கத்தோலிக்க சமுதாயத்துக்கு அளவிட முடியாத மகிழ்வைத் தந்துள்ளது எனவும், இந்நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணத்தின்போது நடைபெற வேண்டும் என்று தாங்கள் நம்பிக்கையோடு செபிப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் வியான்னி.
இலங்கையின் திருத்தூதராகிய அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், இந்தியாவின் கோவா மாநிலத்தின் பெனவ்லினில் 1651ம் ஆண்டு பிறந்தார். பிலிப் நேரி சபையில் சேர்ந்து இலங்கைக்கு மறைப்பணியாளராக வந்தார். அச்சமயம், இலங்கையில் கால்வனிச கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் வன்முறை அடக்குமுறைகளுக்கு கத்தோலிக்கர் பலியாகிக் கொண்டிருந்தனர். மறைந்து வாழ்ந்த இக்கத்தோலிக்கருக்கு மறைப்பணியாற்றிய அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், 15க்கும் மேற்பட்ட ஆலயங்களையும், 400 சிற்றாலயங்களையும் கட்டினார். இவர் 1711ம் ஆண்டு கண்டியில் காலமானார். இவர் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் திருவிவிலியத்தை மொழிபெயர்த்துள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.