2014-09-18 14:49:22

புனிதரும் மனிதரே : தனது மூன்று மகள்களின் சித்ரவதைகளை நேரில் பார்த்தவர்(St. Sophia, the Martyr)


கி.பி.117ம் ஆண்டு முதல் 138ம் ஆண்டுவரை உரோமைப் பேரரசை ஆட்சி செய்த வந்தவர் பேரரசர் ஏட்ரியன். இவருக்குக்கீழ் பணியாற்றிவந்தவர் அந்தியோக்குஸ். அக்காலத்தில் உரோம் நகரில் 12 வயது விசுவாசம், 10 வயது நம்பிக்கை, 9 வயது அன்பு ஆகிய மூன்று அக்கா தங்கைகள் அறிவிலும், அழகிலும், மெய்ஞானத்திலும் சிறந்து விளங்கினர். அதிகாரி அந்தியோக்குஸ் இவர்களைப் பார்க்க விரும்பியதால், இவர்கள் அவர்முன் கொண்டுவரப்பட்டனர். இம்மூன்று சகோதரிகளும் கிறிஸ்தவர்கள் என்பதையும், அவர்கள் கிறிஸ்துவில் ஆழமான நம்பிக்கை வைத்திருப்பதையும் அறிந்தார் அந்தியோக்குஸ். இச்செய்தி பேரரசர் ஏட்ரியனுக்கு அறிவிக்கப்பட்டது. ஏட்ரியனின் பணியாள்கள் அவ்வீட்டுக்குச் சென்று அச்சிறுமிகளை அழைத்துவந்தபோது அவர்களின் தாய் சோஃபியாவும் உடன் சென்றார். தாங்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவோம் என்பதை அறிந்திருந்தும், சோஃபியாவும், அவரின் மூன்று மகள்களும் ஏதோ பெரிய விருந்துக்குச் சென்றதுபோல பேரரசரின் முன் நின்றனர். தனது கேள்விகளுக்கு சோஃபியா ஞானத்துடன் பதிலளித்ததைக் கண்டு இவரிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட பேரரசர், சிறுமிகளிடம் ஆர்த்தெமிஸ் தெய்வத்துக்குப் பலிகொடுக்குமாறு ஆணையிட்டார். சிறுமிகள் அதற்கு இணங்காமல் திடமாய் நின்றனர். இதனால் கோபமுற்று அவர்களைச் சித்ரவதை செய்யுமாறு பணித்தார் பேரரசர். சூடான இரும்புச் சட்டியில் முதலில் போடப்பட்டு, பின்னர் பழுக்கக் காய்ச்சிய அடுப்பில் எறியப்பட்டனர். பின்னர் கொதிக்கும் தார்க்குழம்பில் போடப்பட்டனர். ஆனால் இயேசு இவர்களைக் காப்பாற்றினார். மூன்று நாள்கள் சித்ரவதைப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவர்கள் பேரரசரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததைக் கண்டு சித்ரவதைக்கு மீண்டும் உள்ளாகினர். இது கி.பி.137ம் ஆண்டு. 12 வயது விசுவாசம் வெற்றுமேனியில் பலமாக அடிக்கப்பட்டார். அவரின் மார்பகங்கள் அறுக்கப்பட்டன. பின்னர் நெருப்பு வளர்க்கப்பட்டு அதில் போடப்பட்டார். 10 வயது நம்பிக்கையும் அதேபோல் சித்ரவதைக்கு மீண்டும் உள்ளாகி இறந்தார். கடைக்குட்டி 9 வயது அன்பு ஒரு சக்கரத்தில் கட்டப்பட்டு உயிர்போகும்வரை அடிக்கப்பட்டார். இம்மூன்று சகோதரிகளும் இறைவனைப் புகழ்ந்துகொண்டே உயிர்விட்டனர். இந்தச் சித்ரவதைகள் அனைத்தையும் கைம்பெண்ணான தாய் சோஃபியாவை நேரில் பார்க்கச் செய்தார் பேரரசர். இச்சிறுமிகளை நல்லடக்கம் செய்த தாய் சோஃபியா, அவ்விடத்திலேயே மூன்று நாள்கள் இருந்து பின்னர் இறந்தார். சோஃபியா என்றால் ஞானம் என்று அர்த்தம். புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் பிரிவு 13ல் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பண்புகளைத் தன் மகள்களுக்குச் சூட்டினார் சோஃபியா. இத்தாலியர்களான இந்த மறைசாட்சிகளின் விழா செப்டம்பர் 17.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.