2014-09-17 15:41:32

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


செப்.17,2014. மிதமான வெப்பமும் அதையொத்த இதமான குளிரும் கலந்த ஒரு காலநிலை உரோமில் நிலவிவருகிறது. கோடைகாலம் முடிந்தாலும் உரோம் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் இன்னும் குறையவில்லை. இவர்களோடு திருப்பயணிகளும் கலந்துகொள்ள, இப்புதன் திருத்தந்தையின் மறையுரைக்குச் செவிமடுக்க வந்த கூட்டத்தால் தூய பேதுரு வளாகம் நிரம்பிவழிய, கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்த தன் போதனையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருஅவையை விசுவசிக்கிறேன் என நாம் விசுவாச அறிக்கையிடுகிறோம். 'கத்தோலிக்க' என்ற பதம் திருஅவையின் உலகளாவியத் தன்மையைக் குறித்து நிற்கிறது. அதாவது, எங்கும் பரந்துகாணப்படும் திருஅவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் குறித்த உண்மைகளை எடுத்துரைக்கின்றது என்பதே இதன் பொருளாகும். அனைவருக்குமான இறைஅன்பையும் அவர் வழங்கும் மீட்பையும் எடுத்துரைக்கும் நற்செய்தியை உலகின் இறுதி எல்லைவரை அறிவிக்கும் கொடையை தூய ஆவி திருத்தூதர்களுக்கும் திருஅவைக்கும் வழங்கிய பெந்தகோஸ்தே நிகழ்வின் விளைவான அனைத்து மொழிகளையும் பேசும் வல்லமை வழி தன் உலகளாவியத் தன்மையைக் காட்டுகிறது திருஅவை. அதன்வழி திருஅவை அதன் இயல்பிலேயே மறைபோதகத்தன்மை உடையதாகவும் உள்ளது. நற்செய்தி அறிவிப்புக்கும் பிறருடன் ஆன சந்திப்புக்கும் தன்னை அர்ப்பணித்துள்ள திருஅவை அப்போஸ்தலிக்கத் திருஅவையாகவும் உள்ளது. திருத்தூதர்களின்மேல் கட்டப்பட்டு அவர்கள் பணியிலேயேத் தொடரும் திருஅவை, நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கவும், இறைவனின் வல்லமையையும் இன்கனிவையும் கண்பிக்கவும் அழைப்புப் பெற்றுள்ளது. இதுவும் பெந்தகோஸ்தே நிகழ்விலிருந்தே வழிந்தோடுகிறது. இறைஆசீர் நமக்கு மட்டுமே உரியது என்ற மமதையை நாம் கொள்ளாதவாறு தூய ஆவியானவரே நம்மைத் தடுக்கிறார். அதேவேளை, உயிர்த்த இயேசுவின் மகிழ்வு, அமைதி மற்றும் அன்பை நாம் மற்றவர்களோடு, அதுவும் நம்மை விட்டு வெகுதூரத்தில் இருப்பவர்களோடு அனைத்து வழிகளிலும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என கேட்கிறார் தூய ஆவி. நாம் ஒருபோதும் நம்மை பிறரிலிருந்து மூடிவைக்காமல், அனைத்து மனிதகுலத்தோடும் எப்போதும் ஒருமைப்பாட்டில் வாழ்வோமாக. கிறிஸ்துவையும், அனைவர் மீதும் அவர் கொண்டுள்ள அன்பையும் அனைவருக்கும் அறிவிக்கும்படி, நாம் திருத்தூதர்களின் வழிவந்தவர்களுடனான ஒன்றிணைப்பில் நம்மிலிருந்து வெளியேறிச் செல்வோமாக. புனிதமானதும், உலகளாவியதும், அப்போஸ்தலிக்கத் தன்மையுடையதுமான நம் தாயாம் திருஅவையின் அடையாளமாக நாம் எந்நாளும் விளங்குவோமாக.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஞாயிறன்று தான் அல்பேனிய நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் திருப்பயணம் சிறப்புடன் இடம்பெற அனைவரும் ஒன்றிணைந்து செபிக்குமாறு அழைப்புவிடுத்து, இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.