2014-09-17 15:47:11

செப்.18,2014. புனிதரும் மனிதரே : பேதுருவையும் அழைத்து வந்த சகோதரர் (திருத்தூதர் புனித அந்திரேயா – St. Andrew)


புனித அந்திரேயா எனப்படும் புனித பெலவேந்திரர், முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான இவர், புனித பேதுருவின் சகோதரர். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்து, பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார். உடனே இவர் இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்தபோது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவரும் இவரே.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாத்தியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார். கிரேக்கத்தின் பத்ராஸ் நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக்கொள்வாராக" என்றார் புனித அந்திரேயா. பத்ராசில் உள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் இவரது திருப்பண்டம் போற்றிப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.