2014-09-16 16:27:23

திருத்தந்தை பிரான்சிஸ் : மக்களிடம் பரிவுகாட்டாமல், திறமையாக மறையுரைகள் ஆற்றுவதால் எப்பயனும் இல்லை


செப்.16,2014. மக்களோடு நெருக்கமாக இல்லாமலும், மக்களோடு சேர்ந்து துன்புறாமலும், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்காமலும் இருந்து திறமையாக மறையுரைகள் ஆற்றுவதால் எப்பயனும் இல்லை, அத்தகைய போதகங்கள் வீணானவை என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது ஒரே மகனை இழந்த நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு உயிரளித்த நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவர் இயேசு நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு மீண்டும் வாழ்வளித்து புதுமை செய்ததோடு, அப்பெண்மீது பரிவும் காட்டினார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் தம் மக்களைச் சந்தித்தார் என மக்கள் சொல்கின்றனர், ஆனால் கடவுள் தம் மக்களைச் சந்திக்கும்போது அவரது பிரசன்னம் அவ்விடத்தில் இருக்கின்றது, அவர் தம் மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார் என்று விளக்கினார்.
தம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் அவரால் தம் மக்களின் இதயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், மக்கள் மத்தியில் கடவுள் தம் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நெருக்கமாகச் செல்லும்போது அவர் பரிவன்பால் நிறைந்து காணப்படுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையை மிகத் திறமையாக ஒருவர் போதிக்க முடியும், ஆனால் இப்போதகர்கள் நம்பிக்கையை விதைக்கத் தவறினால் இந்த மறையுரைகளால் எப்பயனும் இல்லை என்று இச்செவ்வாய் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.