2014-09-16 16:29:11

உலகில் சனநாயகத்தை அமைப்பதில் இளையோரின் பங்கு அவசியம், பான் கி மூன்


செப்.16,2014. உலகெங்கும் மக்களாட்சி இடம்பெறுவதற்கு இளையோர் முன்னின்று முயற்சிக்குமாறு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் உலக சனநாயக தினத்தன்று வேண்டுகோள் விடுத்தார்.
செப்டம்பர் 15, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சனநாயக தினத்திற்கென பான் கி மூன் அவர்கள் வெளியிட்ட செய்தியில், வரலாற்றிலுள்ள மிகப்பெரிய இளையோர் தலைமுறையின் உறுப்பினர்கள், சனநாயகத்துக்கு முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துநின்று வெல்வதற்கு முயற்சிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இன்றைய உலகம், முன்பிருந்ததைவிட அதிகமான துயரங்களுக்கு உள்ளாகியிருக்கிறது, அதேசமயம் இளையோர் முன்புபோல் இல்லாமல் தற்போது வாய்ப்புக்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இன்று உலகில் ஐந்தில் ஒருவர் 15க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் என ஐ.நா. கணித்துள்ளது. எனினும், தேர்தல்கள், அரசியல் கட்சிகள், பாரம்பரிய சமூக நிறுவனங்கள் போன்றவற்றில் இளையோரின் பங்கு, குறிப்பாக, வளரும் நாடுகளில் குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.