2014-09-15 16:14:28

புனிதரும் மனிதரே : 25 ஆண்டுகள் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாய் நிறைவேற்ற இயலாதவர்(St.Catherine of Genova)


கத்தோலிக்கத் திருஅவையில் ஒருவர் பாவமன்னிப்புப் பெறுவதற்காக, அருள்பணியாளர் நிறைவேற்றும் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற, 25 ஆண்டுகளாகச் சென்றும், தனது மனதை முழுமையாய்த் திறந்து சொல்ல இயலாமல், பாதியிலேயே அதனைக் கைவிட்டவர் புனித கேத்ரீன். இவர் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதற்கான விளக்கத்தை தனது ஆன்ம குரு மரபோத்தியிடம் விளக்கியிருக்கிறார். ஜெனோவாவில் செல்வக்குடும்பத்தில் பிறந்த கேத்ரீன், 16வது வயதில் ஜூலியானோ அதோர்னோவுக்குப் பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அன்பற்ற தனது கணவரின் கடுங்கோபம், நம்பிக்கைத் துரோகம், ஊதாரித்தனம் போன்றவற்றால் பத்து ஆண்டுகள் திருமண வாழ்வில் கடும்துன்பங்களை மௌனமாக ஏற்றுக்கொண்டார் கேத்ரீன். பின்னர் ஆறுதல்தேடி, அருள்சகோதரியான தனது அக்கா சேர்ந்திருந்த துறவு இல்லம் சென்றார். ஆனால் அவரது அக்காவோ, கேத்ரீனை ஆலயம் சென்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெற்று பாவமன்னிப்புப் பெறுமாறு கூறினார். அது 1473ம் ஆண்டு மார்ச் 22. அன்று கேத்ரீன் ஆலயம் சென்று அருள்பணியாளரிடம் பாவங்களை அறிக்கையிடத் தொடங்கினார். அச்சமயம் திடீரென கடவுளின் அன்பை அதிகமாக உணர ஆரம்பித்தார். கடவுளின் ஆற்றல் கேத்ரீனில் இறங்கியது. ஆதலால் ஒப்புரவு அருளடையாளத்தை முழுமையாக நிறைவேற்றாமல் ஆலயத்தைவிட்டு வெளியேறினார். அன்று தொடங்கி அடுத்த ஏறக்குறைய 25 ஆண்டுகள் இந்த அருளயடையாளத்தை நிறைவேற்ற அடிக்கடி ஆலயம் சென்றார் கேத்ரீன். ஆனால் எல்லா நேரங்களிலும் அதனை பாதியிலே விட்டுவிட்டு வந்தார். இச்சமயங்களில் ஏற்பட்ட ஆழ்ந்த இறையனுபவத்தால், ஜெனோவா மருத்துவமனை சென்று நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தன்னலமற்ற சேவையாற்றத் தொடங்கி அச்சேவைக்கே தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார் கேத்ரீன். பின்னர் அம்மருத்துவமனையின் நிர்வாகியானார். கேத்ரீனின் கணவர் அதோர்னோவும் பின்னர் மனம்மாறி, அதே மருத்துவமனையில் பிறரன்புச் சேவையில் ஈடுபட்டார். செபத்தில் பல ஆழ்ந்த இறையனுபவங்களை பெற்ற ஜெனோவா நகர் புனித கேத்ரீனின் விழா செப்டம்பர் 15. 1447ம் ஆண்டு பிறந்த இவர் 1510ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ஜெனோவாவில் காலமானார்.
கேத்ரீனின் பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் கேத்ரீன்தான் கடைக்குட்டி. இவருக்கு 16 வயது நடந்தபோது இவரது தந்தை காலமானார். அதனால் அதே ஆண்டு கேத்ரீனுக்குத் திருமணம் நடந்தது. கேத்ரீனின் கணவர் ஜூலியானோ அதோர்னோ, மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரம் செய்து பல அனுபவங்களைப் பெற்றவர், செல்வந்தர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.