2014-09-15 16:12:27

திருத்தந்தை பிரான்சிஸ் : குடும்பமே நம்மை மனிதர்களாக உருவாக்கும் முதலிடம்


செப்.15,2014. நம்மை மனிதர்களாக உருவாக்கும் முதலிடமான குடும்பங்களே, சமுதாயத்தை உருவாக்கும் செங்கற்கள் என, இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்டத்தின் இருபது தம்பதியருக்குத் திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நவீன உலகெனும் பாலைவனத்தைக் கடந்துசெல்லும் திருஅவையில் பெரும்பங்கு வகிப்பன குடும்பங்களே என்று கூறினார்.
குடும்பத்தின்வழி நாம் ஒவ்வொருவரும் பல்வேறு உதவிகளைப் பெறுகிறோம், கல்வி, உறவு மேம்பாடு, மகிழ்வின் மற்றும் துன்பங்களின் பகிர்வு போன்றவைகளைப் பெறுகின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, பலவேளைகளில் நாம் திருமண வாழ்வில் துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறோம், ஆனால் இறைவன் நம் அருகேயிருந்து நம்மை வழிநடத்துவதை உணர வேண்டும் என்றும் கூறினார்.
நம் சோதனைகள் நஞ்சுள்ளவைகளாக இருந்தாலும், இறைவன் வழங்கும் மருந்தோ அதைவிட சக்தி வாய்ந்தது, அம்மருந்து நமக்குத் தண்டனை தீர்ப்பளிப்பதில்லை, மாறாக, மன்னித்து ஏற்கிறது என்றார் திருத்தந்தை.
பிணக்குகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால், நாள் முடிவடைவதற்குள் அந்தப் பிணக்குகளைச் சரிசெய்து சமாதானமாகப் பழகுங்கள் எனவும் தம்பதியரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.