2014-09-13 16:12:07

புனிதரும் மனிதரே - பேரரசரின் அன்னையால் உயர்த்தப்பட்டத் திருச்சிலுவை


திருச்சிலுவையை மையப்படுத்தி, செப்டம்பர் 14, கொண்டாடப்படும் இத்திருநாள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 'திருச்சிலுவையின் மகிமை', 'சிலுவையின் வெற்றி' 'பெருமைமிகு திருச்சிலுவை நாள்' 'உயிர்வழங்கும், அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள்' என்பன, இவ்விழாவைக் குறிக்கும் ஒரு சில சொற்றொடர்கள்.
கிறிஸ்தவ மறையைத் தழுவிய கான்ஸ்டன்டைன் என்ற உரோமையப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தில், இயேசு அறையப்பட்டத் திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது.
புனித பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு புனித ஹெலெனா தூண்டப்பட்டார். அவ்விடத்தில் அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா அவர்கள் ஒரு சோதனையை மேற்கொண்டார். மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும், குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனிதக் கல்லறை கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் இக்கோவில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரியத் துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.