2014-09-13 16:55:01

திருத்தந்தையின் திருப்பயணத்தில் அரசியல் கூடாது : கொழும்பு பேராயர்


செப்.13,2014. வருகிற சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தில் அரசியல் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து இவ்வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்தினால் ரஞ்சித் அவர்கள், இத்திருப்பயணத்தின்போது தேர்தல் பிரச்சாரம் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
இத்திருப்பயணத்தின்போது திருத்தந்தை அவர்கள், இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்திப்பார் என்றும், திருத்தந்தை மன்னார் மாவட்டத்துக்குச் செல்வார் என்றும் கர்தினால் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், இத்திருப்பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குண்டு துளைக்காத காரில் செல்ல விரும்பவில்லை எனவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இலங்கை திருப்பயணத்துக்கான இலட்சனை ஒன்றும் திருஅவையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசுத்தலைவர் ராஜபக்ஷ, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தலை நடத்துவதற்குத் தயாரித்து வருகிறார் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AFP








All the contents on this site are copyrighted ©.