2014-09-13 16:54:32

திருத்தந்தை பிரான்சிஸ் : போர், அழிவைக் கொணரும் ஓர் அறிவற்ற செயல்


செப்.13,2014. போர், பைத்தியக்காரத்தனமான மற்றும் ஓர் அறிவற்ற செயல், அழிவைக் கொண்டுவருவது மட்டுமே இதன் ஒரே திட்டம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
முதல் உலகப்போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான படைவீரர்களின் இத்தாலிய நினைவிடமான 'Redipuglia'வுக்கு இச்சனிக்கிழமை காலை சென்று திருப்பலி நிகழ்த்தி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி Redipuglia இராணுவக் கல்லறை வளாகத்தில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராசை, சகிப்பற்றதன்மை, அதிகார மோகம் ஆகியவையே போரை நடத்துவதற்குக் காரணங்கள் என்றும், இவை பல சமயங்களில் கருத்துருவாக்கத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
உலகில் இரண்டாவது முறையாகவும் ஒரு போர் நடந்து தோல்வியடைந்துள்ள நிலையில், இன்று உலகில் துண்டு துண்டாக நடக்கும் போர்கள், குற்றங்கள், படுகொலைகள், அழிவுகள் போன்றவற்றை நோக்கும்பொழுது, ஒருவேளை ஒருவர் தற்போது மூன்றாவது போர் பற்றியும் பேசலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.
போர் பற்றி எனக்கென்ன கவலை, நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா? என்று மனித சமுதாயம் சொல்லலாம், ஆனால் இது இயேசு நற்செய்தியில் நம்மிடம் கேட்பதற்கு முற்றிலும் முரணானது என்றும் கூறிய திருத்தந்தை, இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் பல கனவுகளோடும் பல திட்டங்களோடும் இருந்தவர்கள், ஆனால் அவர்களின் வாழ்வு விரைவில் முடிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு போரிலும் இறந்தவர்களை இவ்விடத்தில் நாம் நினைவுகூருகிறோம், இக்கால உலகிலும் பலர் போர்களில் பலியாகிறார்கள், இதற்குப் பின்னணியில் புவியியல்-அரசியல் யுக்திகளும், பணம் மற்றும் அதிகாரத்தின்மீதிருக்கும் மோகமும் காரணங்களாக உள்ளன, ஆயுதங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்வது மிக முக்கியமாகத் தென்படுகின்றன என்ற கவலையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எனக்கென்ன கவலை என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டுமென, ஒரு மகனின், ஒரு சகோதரரின், ஒரு தந்தையின் இதயத்துடன் உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன், மனித சமுதாயம் கண்ணீர் சிந்தவேண்டிய நேரம் இதுவே என்று, Redipugliaவில் தனது மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.