2014-09-12 16:29:58

வருகிற நவம்பர் இறுதியில் துருக்கி செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.12,2014. துருக்கி நாட்டு அரசுத்தலைவர் Recep Tayyp Erdogan அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பரில் துருக்கி செல்வார் என, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.
வருகிற நவம்பர் இறுதியில் துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணத்துக்குத் தயாரிப்புக்கள் நடந்து வருவதாகவும் அருள்தந்தை லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இத்திருப்பயணம் குறித்த பிற விபரங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் உலகின் பாதுகாவலரும், கீழை வழிபாட்டுமுறையை உருவாக்கியவருமான புனித அந்திரேயாவின் விழாவான நவம்பர் 30ம் தேதியன்று அவ்விழாவைக் கொண்டாடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்தான்புல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாநாளில் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதி குழு ஆண்டுதோறும் இஸ்தான்புல் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
2006ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துருக்கிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.