2014-09-12 16:30:26

மேற்கத்திய அரசுகள், கொலைப் பாவத்தில் உடந்தையாளர்களாக மாற வேண்டாம், உக்ரேய்ன் ஆயர்கள்


செப்.12,2014. உக்ரேய்ன் நாட்டில் தற்போது இரத்தம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்றும், அந்நாட்டுக்கு ஆதரவு வழங்காமல் இருப்பதன்மூலம், அந்நாட்டில் இடம்பெறும் கொலைப் பாவத்திற்கு மேற்கத்திய அரசுகள் உடந்தையாளர்களாக மாற வேண்டாமென்றும் கேட்டுள்ளனர் உக்ரேய்ன் கத்தோலிக்க ஆயர்கள்.
அமைதியாக வாழ்ந்து வந்த உக்ரேய்ன் நாட்டில், அதன் வடபகுதியிலுள்ள இரஷ்யாவின் படைகளும் ஆயுதத் தளவாடங்களும் உக்ரேய்ன் எல்லைகளைக் கடந்து மரணத்தையும் அழிவையும் விதைக்கின்றன, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை மற்றும் தூதரகமுறையிலான முயற்சிகளும் புறக்கணிக்கப்படுகின்றன என்று உக்ரேய்ன் ஆயர்கள் மேலும் கூறினர்.
இந்தக் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவில்லையெனில், விரைவில் வரவிருக்கும் குளிர்காலம் இறப்புக்களின் எண்ணிக்கையை பத்துமடங்கு அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர் ஆயர்கள்.
இன்று உக்ரேய்னில் மக்களைக் கொலைசெய்யும் அவர்கள், நாளை தங்கள் நாட்டிலேயேயும், எல்லைகளைக் கடந்தும் எந்த மனிதருக்கும் எதிராக ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் உக்ரேய்ன் ஆயர்கள் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, இரஷ்யா மீதான ஐரோப்பிய சமுதாய அவையின் புதிய தடைகள் அமலுக்கு வந்துள்ளன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.