2014-09-12 16:29:34

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரின் தவறுகளில் இன்பம் காண வேண்டாம்


செப்.12,2014. பிறரன்பு, உண்மை, தாழ்ச்சியின்றி ஒருவர், மற்றவரை திருத்த முடியாது, அப்படிச் செய்யப்படாத எதுவும் புறங்கூறுதலே, மேலும், ஒருவரைத் திருத்தும்போது இன்பம் காண்பது கிறிஸ்தவப் பண்பே இல்லை என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் சொந்தக் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்கத் தவறிவிட்டு, நமது சகோதரர் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதற்கு எதிராக இயேசு எச்சரிப்பதைக் கூறும் இந்நாளைய லூக்கா நற்செய்தி(6,39-42) வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
மரியின் திருப்பெயரின் விழாவான இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில், தவறுசெய்யும் ஒரு சகோதரர் பிறரன்போடு கடிந்துகொள்ளப்பட வேண்டும், பாசமும் பிறரன்பும் இன்றி ஒருவரைத் திருத்த முடியாது என்று கூறினார் திருத்தந்தை.
மேலும், இவ்வாறு கடிந்துகொள்ளும்போது உண்மையைப் பேச வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சமூகத்தில் பிறரைப் பற்றி எத்தனை தடவைகள் உண்மையில்லாதவைகளைப் பேசுகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பி, இது புறங்கூறுதலாகும் என்று கூறினார்.
புறங்கூறுதல் ஒருவருடைய புகழின் முகத்தில் அறைவதாகும், எனவே பிறருடைய குறைகள் பற்றிப் பேசும்போது பிறரன்பு இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரின் குறைகளைவிட எனது பாவங்கள் பெரிது என்ற எண்ணத்தில், பிறரைத் திருத்தும்போது, தாழ்மைப் பண்பையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சகோதரத் திருத்தம் திருஅவையின் உடலைக் குணப்படுத்தும் செயலாகும், திருஅவையின் அமைப்பிலுள்ள கீறலை நாம் சரிப்படுத்த வேண்டும், தாய்மாரும் பாட்டிகளும் கனிவோடு திருத்துவதுபோல, நாம் திருத்த விரும்பும் சகோதரரிடம் நடந்துகொள்ள வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.