2014-09-12 16:29:06

காங்கோ சனநாயகக் குடியரசில் சிறார் படைப்பிரிவில் பயன்படுத்தப்படுவது குறித்து திருத்தந்தை கவலை


செப்.12,2014. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசில் சிறார் படைப்பிரிவில் பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த அதேவேளை, அந்நாட்டில் இளையோருக்கு மேய்ப்புப்பணியாற்றுவதில் ஆயர்கள் தங்கள் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அட் லிமினா சந்திப்பையொட்டி காங்கோ சனநாயகக் குடியரசு ஆயர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அந்நாட்டில் அமைதியையும், ஆயுதக்களைவையும் ஊக்கப்படுத்துவதற்கு ஆயர்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் முயற்சிக்குமாறு கூறினார்.
பல ஆண்டுகள் போரால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ சனநாயகக் குடியரசில் இளையோர் எதிர்நோக்கும் பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு இறைவனின் வல்லமை தேவைப்படுகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, சிறாரும், வளர்இளம் பருவத்தினரும் புரட்சிப்படைகளால் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்பட்டு தங்களையொத்த வயதுடையோரைக் கொல்வதற்குத் தூண்டப்படுவதை அச்சத்தோடு நினைத்துப் பார்க்கிறேன் என்றும் கூறினார்.
அரசியல் நிறுவனங்களில் பங்கேற்பதை ஆயர்கள் தவிர்த்து நடக்குமாறும் கூறிய திருத்தந்தை, ஆயுதக்களைவு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதன்மூலம், உரையாடல் மற்றும் ஒப்புரவு வழியாக நீதியும் அமைதியும் நிறைந்த சமுதாயத்தை அமைப்பதற்கு ஆயர்கள் சோர்வின்றி உழைக்குமாறும் கூறினார்.
மறைமாவட்டங்களில் இளையோரின் திருத்தூதர்களாக ஆயர்கள் செயல்பட்டு முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், தேவையில் இருப்போர் ஆகியோர்மீது அக்கறை காட்டுமாறும் காங்கோ சனநாயகக் குடியரசு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.