2014-09-11 16:42:34

வத்திக்கான் கிரிக்கெட் அணியை ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.11,2014. இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் குருத்துவ மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வத்திக்கான் கிரிக்கெட் அணியை இப்புதனன்று ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் கிரிக்கெட் அணி பயன்படுத்தவுள்ள கிரிக்கெட் மட்டைகளில் ஒன்றிலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை. இந்த கிரிக்கெட் மட்டையானது, இந்த அணி விளையாடிய பின்னர் eBay இணையத்தளத்தில் பிறன்புச் செயல்களுக்கென ஏலத்துக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானில் உருவாகியுள்ள “வத்திக்கான் XI” என்ற இந்த முதல் கிரிக்கெட் அணி, “ஆங்லிக்கன் XI” என்ற கிரிக்கெட் அணியுடன் இம்மாதம் 19ம் தேதி இங்கிலாந்தில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைக்கும், உரோம் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே பிரிவினை ஏற்பட்ட ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பின்னர், இவ்விரு சபையின் அணிகளும் தற்போது விளையாடவுள்ளன.
அதன் பின்னர், மேலும் நான்கு அணிகளுடன் வத்திக்கான் கிரிக்கெட் அணி விளையாடும்.
“வத்திக்கான் XI” கிரிக்கெட் அணி வீரர்களில் பெரும்பான்மையினோர், கிரிகெட் பிரியர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்பணியாளர்களைக் கொண்டு கிரிக்கெட் அணி ஒன்று வத்திக்கானில் உருவாக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை 2012ம் ஆண்டில் முன்வைத்தார் திருப்பீடத்துக்கான ஆஸ்திரேலியத் தூதர் ஜான் மெக்கார்த்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.