2014-09-11 16:08:25

புனிதரும் மனிதரே : பேராசை தந்த மனமாற்றம்(St.Guy of Anderlecht)


பெல்ஜியம் நாட்டின் Láken நகரில் ஏழை ஒருவர் ஆலயத்தைச் சுத்தம் செய்வது, ஆலயத்தில் செபம் சொல்வது, திருப்பலிக்கு உதவுவது, அந்நகரில் உதவி தேவைப்படுபவருக்கு உதவுவது, ஆதரவற்றவர்களுக்குச் சேவை செய்வது போன்ற சாதாரண வேலைகளைச் செய்து வந்தார். இதனால் அவரை அவ்வூர் மக்கள் மிகவும் விரும்பினர். ஒருநாள் ப்ரசல்லஸ் நகரிலிருந்து Lákenக்கு வியாபாரி ஒருவர் வந்தார். இவர் கப்பலில் சரக்கு ஏற்றுமதி செய்து செழிப்பாய் வாழ்ந்து வந்தவர். இவர் அந்த ஆலயப் பணியாளர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்து, உமக்கு இந்த ஊரில் நல்ல பெயர் இருக்கிறது, எனவே நான் எனது வணிகத்தில் உமக்கு ஒரு பங்கைத் தருகிறேன், வாரும், இருவரும் இணைந்து தொழில் செய்வோம் என்று அழைத்தார். அத்தொழிலில் ஆசை இருந்தாலும், ஆலயப் பணியைவிட்டுவிட்டுச் செல்ல மனம் அவருக்கு இசையவில்லை. தீர்மானம் எடுப்பதற்குச் சற்றே தடுமாறினார். எப்படியோ பேசி எடுத்து அந்த வியாபாரி அந்த மனிதரைத் தன்னோடு அழைத்துச் சென்றார். சில காலம் சென்று அந்த ஆலயப் பணியாளர் வாங்கிய பொருள்கள் முதன்முறையாக சரக்குக் கப்பலில் பயணிக்கத் தொடங்கின. ஏழையாக இருந்த அவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அம்மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. கப்பல் அப்படியே சரக்கோடு துறைமுகத்திலேயே கடலில் மூழ்கியது. அப்போது அந்த ஆலயப் பணியாளர் பணத்தின்மீது பேராசை கொண்டு தவறு செய்துவிட்டேனே என மிகவும் மனம் வருந்தினார் அந்த மனிதர். தனது பேராசைக்காக இறைவன் தன்னை தண்டித்துவிட்டதாக நினைத்து அழுதழுது இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். பின்னர் இத்தொழிலைக் கைவிட்டு மீண்டும் தனது பழைய இடத்துக்குச் சென்றார். ஆனால் அங்கு ஏற்கனவே வேறு ஒருவர் வேலை செய்துவருவதைக் கண்டு, தவமாக, முதலில் உரோமைக்கும், பின்னர் எருசலேமுக்கும் திருப்பயணம் மேற்கொண்டார். அவ்விடங்களில் திருப்பயணிகளுக்கு வழிகாட்டியாகப் பணிசெய்தார். பின்னர் தனது சொந்த ஊரான Anderlecht செல்லும் வழியில் 1012ம் ஆண்டில் காலமானார். இவர்தான் Anderlecht நகர் புனித Guy (புனித Guido, Guidon, Wye of Láken). "Anderlechtன் ஏழை மனிதர்" எனவும் இப்புனிதர் அழைக்கப்படுகிறார். கொம்பு உள்ள விலங்குகள், திருமணமாகாதவர்கள், வெறிநாய் கடித்தவர்கள், வலிப்பு நோயாளிகள், ஆலயப் பணியாளர்கள், குதிரையைக் கவனிப்பவர்கள் போன்றவர்களுக்குப் பாதுகாவலர். கி.பி.950ம் ஆண்டில் ஏழை விவசாயப் பெற்றோருக்குப் பிறந்த இவர், செபத்தில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலே தனது ஊரைவிட்டு லாக்கன் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு அவர் ஆலயத்தில் எப்போதும் செபித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த பங்குத்தந்தை அவருக்கு ஆலயத்தைப் பராமரிக்கும் பணிகளைக் கொடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.