2014-09-11 16:42:56

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துக்களாக மாற்றப்படும் செய்தி கவலையைத் தருகிறது, மும்பைப் பேராயர்


செப்.11,2014. இந்தியாவில் அண்மையக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துக்களாக மாற்றப்படுகின்றனர் என்ற செய்தி கவலையைத் தருகிறது என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
ஒவ்வொரு மனிதரும் தங்கள் மனசாட்சியையும், மதத்தையும் பின்பற்றுவது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதை வலியுறுத்திய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அண்மைய நிகழ்வுகளில் கிறிஸ்தவர்கள் தாங்களாகவே விரும்பி இந்து மதத்தைத் தழுவினரா அல்லது இது இந்து அடிப்படைவாதக் குழுக்களின் தவறானப் பிரச்சாரமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
உத்திரப் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ந்து நிகழ்ந்த இரு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மதச்சுதந்திரம் என்பது உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் கூறினார்.
பழமையும், உன்னதக் கொள்கைகளும், பல மதங்களும் கொண்ட இந்தியாவில் மதங்களுக்கிடையே நல்லுறவையும், உரையாடலையும் வளர்ப்பது அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கடமை என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.