2014-09-11 16:42:42

இத்தாலியப் பிரதமர், கர்தினால் பசெத்தி சந்திப்பு


செப்.11,2014. மத்திய கிழக்கு நாடுகள், உக்ரேய்ன், வட ஆப்ரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் வன்முறைகளை இத்தாலியப் பிரதமர் மத்தேயு ரென்சி அவர்களுடன் விவாதித்தாக இத்தாலிய கர்தினால் ஒருவர் தெரிவித்தார்.
புதிதாக நியமனம் பெறும் கர்தினால்களுக்கு இத்தாலியத் தூதரகம் இச்செவ்வாயன்று வழங்கிய வரவேற்பு விருந்தில் கலந்துகொண்ட பெருஜியா நகர் கர்தினால் Gualtiero Bassetti அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த வரவேற்பு விருந்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், ஆயர்கள் மாமன்றச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, அருள்பணியாளர்கள் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Beniamino Stella ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இத்தாலியப் பிரதமருடன் நடைபெற்ற இவ்விருந்தில் இத்தாலிக்குள் ஒவ்வொரு நாளும் நுழையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதென CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தாலியக் கடற்கரையை அடையும் புலம்பெயர்ந்தோர் நிலை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்கறை கொண்டிருப்பதும், பாதுகாப்பு அதிகமின்றி கடற்பயணம் மேற்கொள்ளும் இவர்களை இத்தாலியக் கடற்படையினர் காத்து வருவதற்கும் திருத்தந்தை நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.