2014-09-10 14:57:20

வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலையைக் குறைப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்


செப்.10,2014. வளிமண்டலத்தில் 2013ம் ஆண்டில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகமாக இருந்தவேளை, இந்நிலையை தடுப்பதற்கு உலகினர் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது ஐ.நா. காலநிலை நிறுவனம்.
உலக வானிலை ஆய்வு நிறுவனமான WMO வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலக வெப்பநிலை அதிகரிப்பில் 34 விழுக்காட்டுக்கு மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ம் தேதி நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடக்கவுள்ள, உலக வெப்பநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையைக் குறைப்பதற்கு உலக சமுதாயம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு, 1750ம் ஆண்டில் இருந்த அளவைவிட 142 விழுக்காடும், மீத்தேன் வாயுவின் அளவு 253 விழுக்காடும், நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு 121 விழுக்காடும் இருந்ததாக WMO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை ஐம்பதாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.