2014-09-10 14:57:55

பொருளாதார வளர்ச்சி 25 விழுக்காடு உலக மொழிகளுக்கு அச்சுறுத்தல்


செப்.09,2014. உலகில் பேசப்படும் ஏறக்குறைய ஏழாயிரம் மொழிகளில் 25 விழுக்காடு அழியும் ஆபத்தை எதிர்நோக்குவதாகவும், இதற்குப் பொருளாதார வளர்ச்சியே காரணம் எனவும் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில், வடமேற்கு ஆஸ்திரேலியா, நியு கினி, வட Eurasia, ஆப்ரிக்காவின் பாலைநிலப் பகுதிகள், மத்திய கிழக்குப் பகுதி, பிரேசில், வட அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி ஆகிய இடங்களில் அதிக அளவிலான மொழிகள் படிப்படியாக மறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டுக்கு, ஜப்பானில் பேசப்படும் Ainu என்ற மொழியைப் பேசும் மக்கள் தற்போது பத்து விழுக்காட்டினரே உள்ளனர் என்று, இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய Tatsuya Amano அவர்கள் தெரிவித்தார்.
மக்கள் பேசும் மொழிகளும், உயிரினங்களும் அழிந்து வருவதற்கு ஒற்றுமை உள்ளது என்றுரைத்த Amano அவர்கள், மொழிகள் அழியக்கூடிய கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஹிமாலயாவிலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
உலகில் மொழிகளைக் காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், இந்த நூற்றாண்டு முடிவதற்குள், உலகில் மக்கள் பேசும் மொழிகளில் பாதி மொழிகள் அழிந்துவிடும் என ஐ.நா. எச்சரித்திருப்பதையும் Amano அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Live Science








All the contents on this site are copyrighted ©.