2014-09-10 14:51:08

பிரேசில் நாட்டு கருத்தரங்கில் அமேசான் காடுகளைப் பற்றிய விவாதங்கள் இடம்பெறுவது குறித்து திருத்தந்தை மகிழ்வு


செப்.10,2014. 'டிஜிட்டல்' உலகத் தொடர்பு வசதிகளின் உதவியைக் கொண்டு, நாம் தனித்துச் செல்வதில் பயனில்லை; மாறாக, மக்கள் அனைவரோடும் இணைந்து உலகப் பயணத்தை மேற்கொள்வோமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 9, இச்செவ்வாய் முதல் 12, இவ்வெள்ளி முடிய, பிரேசில் நாட்டில், அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழு நடத்திவரும் ஒரு கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பூமிக்கோளத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகளைப் பற்றிய விவாதங்கள் இக்கருத்தரங்கில் இடம்பெறுவது குறித்து, திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
தொடர்புத் துறையின் பல்வேறு புதியக் கண்டுபிடிப்புக்களின் உதவியோடு நடைபெறும் இக்கருத்தரங்கு, மக்களோடு கொள்ளவேண்டிய நேரடித் தொடர்பிலிருந்து நம்மைத் தூரப்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.