2014-09-10 15:33:34

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


செப்.10,2014. கோடைகாலம் முடிவுறும் தறுவாயிலும் வெயிலின் தாக்கம் உரோம் நகரில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் திருத்தந்தையின் புதன் மறையுரை, அங்கு குழுமும் கூட்டத்தை மனதில்கொண்டு, தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. முதலில் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த நோயாளிகளைச் சந்தித்தார். அதில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்கள் பலரும் இருந்தனர். அவர்களுக்காக தான் தொடர்ந்து செபிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இப்பணியை தொடர்ந்து ஏற்று நடத்த தனக்காகச் செபிக்குமாறு வேண்டினார். நோயாளிகளோடும் குழந்தைகளோடும் இணைந்து 'அருள்நிறை மரியே வாழ்க' என்ற செபத்தைச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பிற்குப் பின், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களைச் சந்திக்க வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அந்தப் பெரிய வளாகத்தையும் தாண்டி மக்கள் வெளியேயும் கூடியிருந்ததால் காரில் நின்றுகோண்டே வளாகத்திற்கு வெளியே வந்த திருத்தந்தை, அக்கூட்டத்தினிடையே ஒரு வலம்வந்து, பின்னர் வளாகத்திற்குத் திரும்பி அங்குள்ள மக்களிடையேயும் காரில் வலம் வந்தார். திருத்தந்தையின் இப்புதன் மறையுரை 'கருணையின் செயல்களை நமக்குக் கற்பிக்கும் தாயாக திருஅவையை நோக்குவோம்' என்பதை மையப்பொருளாகக் கொண்டு அமைந்திருந்தது.
விசுவாசத்தில் நமக்கு உரமூட்டி, மீட்பின் பாதையில் நம்மை வழிநடத்தி, தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் தாயாக திருஅவையை நாம் கடந்த வார புதன் மறையுரையில் நோக்கினோம். 'கருணையின் செயல்பாடுகளை நமக்குக் கற்றுத்தரும் அன்னையாக திருஅவையை நோக்கி அது குறித்த சிந்தனைகளை இன்று பகிர விரும்புகிறேன்’ என தன் புதன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். ஒரு நல்ல ஆசிரியர் தேவையற்ற சிறு விவரங்களில் தன்னை இழப்பதில்லை, மாறாக எது அத்தியாவசியமானதோ அதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். நற்செய்தியைப் பொறுத்தவரையில் முக்கியமானது என்பது கருணையே. தந்தை இரக்கமுள்ளவராக இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள் என இயேசு தன் சீடர்களிடம் கூறியதுபோல், திருஅவையும் தன் அங்கத்தினர்களிடம், தந்தை மற்றும் இறைமகன் போல் இரக்கமுடையவர்களாக இருக்குமாறு கற்பிக்கிறது. தன் செயல்கள் மூலமே இதனைக் கற்பிக்கும் திருஅவை, அச்செயல்களை விளக்குவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. பல தந்தையரும் தாய்களும் தங்கள் குழந்தைகளுக்கு விருந்தோம்பலின் விதியாக காலம் காலமாகக் கற்பித்துவருவதையே திருஅவையும் போதிக்கிறது. அதாவது, பசியால் வாடுவோருக்கு உணவையும், ஆடையின்றி இருப்போருக்கு ஆடைகளையும் வழங்க கற்பிக்கிறது. மருத்துமனைகளிலும், தனியார் இல்லங்களிலும் தங்கள் வாழ்வைச் செலவிடும் நோயாளிகள், முதியோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு அருகாமையில் நாம் இருக்கவேண்டும் என திருஅவை நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறது. சிறையிலிருப்போரையும் சென்றுச் சந்திக்கும்படி திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஏனெனில், இரக்கத்தின்வழி இதயத்திலும் வாழ்விலும் மாற்றம்பெறும் இந்த சிறைக்கைதிகள், விடுதலையாகிச் செல்லும்போது வாழ்வைப் புதுப்பித்தவர்களாக சமூகத்தில் நுழையமுடியும். கைவிடப்பட்டோர் மற்றும் யாருமற்ற அனாதையாக இறப்போருக்கு அருகாமையில் நாம் இருக்கவேண்டும் என திருஅவை நம்மை விண்ணப்பிக்கிறது. அவ்வாறு நாம் செய்வதன் வழி, இவ்வுலக வாழ்வை விட்டுச் செல்வோரிலும், இவ்வுலகில் இருப்போரிலும், இரக்கத்தின்வழி அமைதியைக் கொணரமுடியும். நம்மிடம் அன்புகூர்வோருக்கு மட்டுமல்ல, ஏனையோருக்கும் நம் அன்பை காட்டவேண்டும். இது மீட்பிற்கு இன்றியமையாத ஒரு கூறாகும். இறைவன் நமக்கு இரக்கம் காண்பித்து, இறைமகன் எனும் உன்னதக் கொடை வழியாக நம் மீது அன்பு கூர்ந்தார். திருஅவையை நம் தாயாக வழங்கியதற்காக இறைவனுக்கு நாம் நன்றி கூறுவோம். தாயாம் திருஅவையே நமக்கு இரக்கத்தின் பாதையையும் வாழ்வின் பாதையையும் கற்பிக்கிறார்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.