2014-09-10 14:53:25

சிறுவர், சிறுமியரை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது, அடிமைத்தனத்தின் புதிய முகம் - பேராயர் சில்வானோ தொமாசி


செப்.10,2014. குழந்தைகளும், சிறுவர், சிறுமியரும் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, அவர்களை, போர்க்களங்களில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது, அடிமைத்தனத்தின் புதிய முகமாகத் தெரிகிறது என்று, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் கூறினார்.
"இன்றைய அடிமைத்தனத்தின் வடிவங்கள்" என்ற தலைப்பில், ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை அவையின் 27வது சிறப்புக் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பேராயர் தொமாசி அவர்கள், இவ்வாறு கூறினார்.
போர்க்களங்களில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் குழந்தைகள், 2,50,000க்கும் அதிகம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் தொமாசி அவர்கள், நைஜீரியாவின் Boko Haram, மற்றும் ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள், இத்தகையச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பு என்பதையும் குறிப்பிட்டார்.
இக்கொடுமையைத் தீர்ப்பதற்கு, உலகில் நிலவும் வறுமையை நீக்கும் முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.