2014-09-10 14:56:14

அனைவரும் சமத்துவம் காண மேற்கொள்ளப்பட்ட போராட்ட முயற்சி இன்னும் முழுமை அடைய வேண்டியுள்ளது - அமெரிக்க ஆயர்கள் பேரவை


செப்.10,2014. குடியுரிமைச் சட்டத்தை மையப்படுத்தி, 50 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த போராட்டங்கள் போற்றுதற்குரியன என்றும், அனைவரும் சமத்துவம் காண மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி இன்னும் முழுமை அடைய வேண்டியுள்ளது என்றும் அமெரிக்க ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் கறுப்பின மக்கள் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கவேண்டுமென்ற போராட்டம், 1964ம் ஆண்டு துவங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது.
இப்பொன் விழா ஆண்டில், செப்டம்பர் 9ம் தேதி, இச்செவ்வாயன்று, கறுப்பின அடிமைகளின் பாதுகாவலர் என்று கருதப்படும் புனித பீட்டர் கிளேவர் அவர்களின் திருநாளன்று, குடியுரிமைச் சட்டப் போராட்டத்தைக் குறித்து, அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Joseph Kurtz அவர்கள் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாட்டை ஒழிக்க இன்னும் பல தீவிர முயற்சிகள் தேவை என்று கூறிய பேராயர் Kurtz அவர்கள், அமெரிக்காவில் இன்னும் பல்வேறு வழிகளில் நிலவிவரும் பாகுபாடுகளை ஒழிக்க அனைவரும் இணைந்து முயலவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குடியுரிமை போராட்டங்களில், முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் முக்கியப் பங்களிப்பைக் குறித்து எடுத்துரைத்த பேராயர் Kurtz அவர்கள், நம் முன்னோரின் தியாகங்கள் பலனளிப்பது, நம் தொடர் முயற்சியில் அடங்கியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.