2014-09-09 14:20:48

விவிலியத்
தேடல் மத்தேயு நற்செய்தியின் சில உவமைகள் : ஓர் அறிமுகம்


RealAudioMP3 பொதுவாகவே, மனித வாழ்வில் கதைகளுக்குத் தனியொரு இடமுண்டு. குழந்தைப் பருவம் முதல் கதைகள் மீது நமக்குள்ள ஈர்ப்பை நாம் அறிவோம். அமைதிக்கான நொபெல் பரிசை (1986ம் ஆண்டு) வென்ற Elie Weisel என்பவர் எழுதியுள்ள The Gates of the Forest என்ற நூலின் முன்னுரையில் கதைகளுக்கு உள்ள சக்தியை ஒரு கதை வழியே இவ்வாறு கூறியுள்ளார்...
பால் ஷேம் டாவ் என்ற யூதகுரு தான் வாழ்ந்த காலத்தில், மக்களுக்கு ஆபத்து வருவதாக அவர் உணர்ந்தால், காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வார். அங்கு நெருப்பு மூட்டி, தியானம் செய்து, செபம் ஒன்றை சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
அவருடைய சீடர் - மஜீத் மஸரீத். தன் குருவின் மறைவுக்குப் பின், மக்களுக்கு ஆபத்து வரும்போது அவரும் காட்டில் அதே இடத்திற்குச் செல்வார். "ஆண்டவனே, எனக்குத் தீ மூட்டத் தெரியாது, ஆனால், என் குரு சொன்ன செபம் எனக்குத் தெரியும்" என்று சொல்லியபின், அந்தச் செபத்தைச் சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
அவருக்குப் பின் வந்த மோஷே லீப் சாசோவ் என்ற குரு, ஆபத்து வரும்போது, காட்டுக்குச் சென்று, "ஆண்டவனே, எனக்குத் தீ மூட்டவோ, செபம் சொல்லவோ தெரியாது. காட்டில் இந்த இடம் மட்டும் தெரியும். இது போதுமே" என்று கடவுளிடம் சொல்வார். அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
இறுதியாக வந்தவர் ரிஸின் இஸ்ராயேல். இவர் தன் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்துக்கொண்டு, கடவுளை வேண்டுவார்: "எனக்குத் தீ மூட்டவோ, செபம் சொல்லவோ, காட்டில் இருந்த இடமோ தெரியாது. இந்தக் கதை மட்டும் தெரியும். இது போதுமென்று நினைக்கிறேன்" என்பார். அப்போதும்... அற்புதம் நிகழும், ஆபத்து நீங்கும்.
இக்கதையின் இறுதியில் Elie Weisel கூறியுள்ள வார்த்தைகள், சிந்தனையைத் தூண்டுபவை: "கடவுள் கதைகளை விரும்பியதால் மனிதரைப் படைத்தார்." கடவுள் கதைகளை விரும்பியதால் மனிதரைப் படைத்தார் எனில், படைப்பு ஒரு மாபெரும் வெற்றிதான். கடவுள் மட்டுமல்ல, அவர் படைத்த மனிதர்களாகிய நாமும் கதைகளை விரும்புகிறோம். நமக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களும் கதைகளாய் பிறக்கின்றன. துன்பத்தைக் கதையில் பூசி, கசப்பைக் குறைத்துக் கொள்கிறோம். இன்பத்தைக் கதைகளில் தோய்த்து, இறுதித் துளிவரை சுவைக்கிறோம். கடவுளைப் பற்றியும் கதைகளைச் சொல்கிறோம். உலகின் பல முக்கிய மதங்களில் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

உலக மதங்களில் கதைகள் வகிக்கும் இடத்தைக் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட John Shea என்ற அறிஞர் எழுதிய "கடவுள் கதைகள் - அதிகாரப்பூர்வமற்ற சுயவரலாறு" (Stories of God - An Unauthorized Biography) என்ற நூலில் கூறியுள்ள ஆழமான கருத்துக்கள், மனிதர்கள் நடுவில் கதைகள் வகிக்கும் சக்திவாய்ந்த இடத்தைக் கூறுகிறது.
"நம் சக்தியின் எல்லைகளை நாம் அடையும்போது, ஒழுங்கு செய்யப்பட்ட உலகங்கள் உடையும்போது, நமது நன்னெறி கோட்பாடுகள் கேள்வியாகும்போது, கேலியாகும்போது, வாழ்வைக் குறித்த மந்திரச் சக்தி மறையும்போது, நாம் பரம்பொருளின் பேருண்மைக்குள் நுழைகிறோம்.
இந்தப் பேருண்மையில் வாழ்வது, பயமுறுத்தும், அதேநேரம், பலப்படுத்தும். மிக ஆழ்ந்த இருளும், கண்ணைப்பறிக்கும் ஒளியும் இணைந்துவரும்.
இத்தகையச் சூழலில், நாம் மேற்கொள்ளும் ஒரு மனித முயற்சி... அனைவரும் சேர்ந்துவந்து கடவுள் கதைகளைப் பரிமாறிக்கொள்கிறோம். நமது ஆழ்ந்த பயங்களை விரட்டவும், நம்பிக்கையை வழங்கவும் இக்கதைகள் உதவுகின்றன" என்று அறிஞர் John Shea அவர்கள் கூறியுள்ளார்.

நான்கு நற்செய்திகளிலும் இயேசு கூறிய போதனைகளை ஒன்றாகத் திரட்டினால், அவற்றில் ஏறத்தாழ பாதி அளவு கதைகள், உவமைகள் இருப்பதை உணரலாம். ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் ஒரு படி மேலேச் சென்று, இயேசு பேசியதெல்லாம் உவமைகள் வழியாகவே என்றும் கூறுவர். அவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் மத்தேயு, மாற்கு என்ற இரு நற்செய்திகளிலும் பின்வரும் பகுதி காணப்படுகிறது: (மத். 13: 34-35; மாற். 4: 33-34)
மத்தேயு நற்செய்தி 13: 34-35
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 'நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
உவமைகள், உருவகங்கள் வழியே சொல்லப்படும் உண்மைகளை உலகம் வரவேற்கும் என்பதைக் கூற, யூதப் பாரம்பரியத்தில் கதை ஒன்று உண்டு:
"உவமைகளுக்கு ஏன் இவ்வளவு சக்தி உள்ளது?" என்று யூத குரு Maggidஇடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள். "இக்கேள்விக்கு ஓர் உவமை வழியாக விளக்கம் தருகிறேன்" என்று குரு Maggid தொடர்ந்தார்: "உலகில் உண்மை பிறந்தது. பிறந்ததுமுதல் அது ஆடை எதுவும் அணியாமல், பிறந்த மேனியாய் உலகைச் சுற்றிவந்தது. அதைக் கண்ட அனைவரும் முகம் சுளித்து, ஒதுங்கிச் சென்றனர். யாரும் உண்மையைத் தங்கள் இல்லங்களில் வரவேற்கவில்லை. ஒரு போர்வை கூட இல்லாமல், அப்படியே சுற்றிவந்த உண்மையைக் கண்டு பயந்து ஓடியவர்களே அதிகம்.
தனக்கு நேர்ந்ததைக் கண்டு உண்மை மிகவும் வருத்தம் அடைந்தது. அது இரவும், பகலும் தங்க இடமின்றி அலைந்தது. ஒருநாள் உண்மை, உவமையைச் சந்தித்தது. பல வண்ணங்கள் கொண்ட ஓர் உடையணிந்து மகிழ்வுடன் வந்த உவமை, உண்மையைப் பார்த்து, 'ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கிறாய், நண்பனே?' என்று கேட்டது. உண்மை உவமையிடம், 'எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. என்னைக் கண்டு எல்லாரும் வெறுத்து ஒதுக்குகின்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றது. உவமை அதனிடம், 'நண்பா, உன் வயது ஒரு காரணம் அல்ல. பார்... எனக்கும், உனக்கும் ஒரே வயதுதான். ஆனால், எனக்கு வயதாக, வயதாக மக்கள் என்னை இன்னும் அதிகம் விரும்புகின்றனர். இதன் இரகசியம் இதுதான்... மக்கள் எதையும் பல வண்ணங்களில் காண விழைகின்றனர். என்னிடம் உள்ள வண்ண ஆடையொன்றை நீயும் அணிந்துகொள். அதன்பிறகு என்ன நடக்கிறதென்று நீயே பார்' என்று உவமை அறிவுரை சொன்னது.
உவமை சொன்ன ஆலோசனையை உண்மை ஏற்றது. உவமையின் வண்ண ஆடையை உண்மை உடுத்திக்கொண்டது. அன்றிலிருந்து, உண்மையும், உவமையும் இணைபிரியாமல் உலவி வந்தனர். இருவரையும் மக்கள் வெகுவாய் விரும்பி வரவேற்றனர்" என்று குரு Maggid கூறி முடித்தார்.

கதைகள் நம்முள் உருவாக்கும் ஈடுபாடு, கதைகளுக்கு உள்ள குணப்படுத்தும் ஆற்றல் என்ற பல்வேறு காரணங்களால் இயேசு கதைகளை, உவமைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்ல முடியும். இயேசு தன் தொடுதலாலும், வார்த்தைகளாலும் மக்களை குணமாக்கினார் என்பதை நாம் அறிவோம். அவரது உவமைகள் வழியாகவும் அவர் நிச்சயம் பல்லாயிரம் மக்களை, அவர்களது மனக்காயங்களில் இருந்து குணமாக்கியிருப்பார் என்று நம்பலாம். இவை அனைத்தையும் விட, இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, Anthony de Melloவின் 'One Minute Wisdom' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்:
குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."நமக்கும் உண்மைக்கும், நமக்கும் உண்மைக் கடவுளுக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்ததால், அவர் உவமைகள் வழியே அந்த இறைவனை உலகிற்குக் கொண்டுவந்தார்.
Klyne Snodgrass என்ற விவிலியப் பேராசிரியர், இயேசுவின் உவமைகள் பற்றிய சிறந்த நூல் ஒன்றை 2008ம் ஆண்டு வெளியிட்டார். "குறிக்கோளுடன் சொல்லப்படும் கதைகள்: இயேசுவின் உவமைகளுக்கு ஒரு முழுமையான வழிகாட்டி" (Stories with Intent: A Comprehensive Guide to the Parables of Jesus) என்ற இந்நூலில், ஆசிரியர் Snodgrass அவர்கள், இயேசுவின் உவமைகளில் காணப்படும் பல சிறப்பு அம்சங்களை விவரித்துள்ளார். அவற்றில் ஒரு முக்கியமான அம்சமாக அவர் கூறுவது: இயேசு கூறிய பல முக்கியமான உவமைகளில் 'புரட்டிப் போடுதல்' என்ற யுக்தியைப் பயன்படுத்தினார் என்பது.
இஸ்ரயேல் மக்கள் அதுவரை நம்பி வந்த, அல்லது அவர்கள் மதத்தலைவர்கள் மூலம் கற்றுவந்த கருத்துக்களை, இயேசு தலைகீழாகப் 'புரட்டிப் போட்டார்'.

உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையில், (லூக்கா 10: 25-37) உயர் நிலையில் உள்ளவர்கள் என்று கருதப்பட்ட குரு, லேவியர் ஆகியோரைவிட, சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட சமாரியரே சிறந்தவர் என்று இயேசு சொல்லாமல் சொன்னது, அன்று மட்டுமல்ல, இன்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைதானே!
செல்வரும் இலாசரும் என்ற உவமையில், (லூக்கா 16: 19-31) ஏழை இலாசர் விண்ணகம் சென்றார் என்றும், செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார் என்றும் இயேசு கூறியது மக்களின் சிந்தனைகளை வெகுவாகப் புரட்டிப் போட்டிருக்கும்.
கோவிலில் வேண்டச்சென்ற பரிசேயரும், வரிதண்டுபவரும் என்ற உவமையின் இறுதியில்,பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்(லூக்கா 18: 14) என்று இயேசு கூறிய முடிவு, சுற்றியிருந்தோரைக் கட்டாயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும்.
லூக்கா நற்செய்தியில் கதை வடிவில் அமைந்த 'நல்ல சமாரியர்', ‘செல்வரும் இலாசரும்’, ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ உட்பட, 13 உவமைகளில் கடந்த 81 வாரங்களாக நாம் மேற்கொண்ட ஒரு தேடல் பயணத்தில், பல அரிய முத்துக்களைக் கண்டெடுத்தோம். நம் தேடல் பயணத்தில் துணைவந்த இறைவனுக்கு இவ்வேளையில் நன்றி கூறுகிறோம். தொடர்ந்து அடுத்த சில வாரங்கள், மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் ஒரு சில உவமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.







All the contents on this site are copyrighted ©.