2014-09-09 16:21:49

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு பேராசிரியர் அல்ல, அவர் மக்கள் மத்தியில் இருக்கிறார்


செப்.09,2014. பேராசிரியர் இருக்கையிலிருந்து பேசும் பேராசிரியர் அல்ல இயேசு, மாறாக, அவர் மக்கள் மத்தியில் செல்கிறார், அவர்கள் குணமடையும்படி அவர்கள் தம்மைத் தொடுவதற்கு அனுமதிக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலைத் திருப்பலியில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இந்நாளைய நற்செய்தியை(லூக்.6,12-19) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசு செபித்த நேரம், தம் பன்னிரு திருத்தூதர்களை அவர் அழைத்தது, அவர் மக்களுக்கு நெருக்கமாக இருந்தது ஆகிய அவர் வாழ்வின் மூன்று தருணங்கள் பற்றி விளக்கினார்.
இயேசு இரவு நேரத்தை கடவுளிடம் செபிப்பதில் செலவிட்டார், நம்மை மீட்க வந்த வல்லமை படைத்த இயேசு அடிக்கடி செபித்தார், அவர் நமக்காக எப்போதும் செபிக்கிறார், இயேசு பரிந்துபேசுவதில் பெரியவர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு செபித்த பின்னர் தம் பன்னிரு திருத்தூதர்களை அழைத்தார், எனவே நாம் அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை இது காட்டுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு அழகான முகம், அசிங்கமான முகம் என்று பார்க்காமல் அவர் நம்மை அன்பு செய்கிறார், நம்மை அன்போடு தேர்ந்தெடுக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம்மைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தும் இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் என்றும், இயேசு பாவிகளோடும் இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மூன்றாவதாக, இயேசு மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறார், பெருந்திரளான மக்கள் மத்தியில் அவர் செல்கிறார் என்றும், இயேசு பேராசிரியரோ, ஆசிரியரோ அல்ல, அவர், பேராசிரியர் இருக்கையிலிருந்து பேசுபவருமல்ல, மக்களுக்கு வெகுதொலைவில் இருக்கும் யோகியுமல்ல ஆனால் அவர் மக்கள் மத்தியில் செல்கிறார், மக்கள் தம்மைத் தொடுவதற்கு அனுமதிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நம் போதகரான இயேசு செபிப்பவர், தம் மக்களைத் தேர்ந்தெடுப்பவர், தம் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கு வெட்கப்படாதவர், இதுவே அவரில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது, எனவே அவரில் நம்பிக்கை வைப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.