2014-09-08 15:53:26

புனிதரும் மனிதரே : தன்னடக்கத்தை உணர்த்தியவர் (St. Eleutherius)


அவர் இத்தாலியின் ஸ்போலெத்தோவுக்கு(Spoleto) அருகிலிருந்த ஆதீனத்தின் தலைவராக இருந்தவர். அற்புதங்கள் நிகழ்த்தும் கொடையைப் பெற்றிருந்தவர். பல நல்ல பண்புகளைக் கொண்ட நல்ல மனிதர். தான் செய்யும் சிறு தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கும் பண்பாளர். அப்பகுதியில் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் ஆவியின் அலைக்கழிப்பால் மிகவும் துன்புற்றான். அந்த ஆவி அவனைப் புரட்டிப் போட்டது. எனவே அச்சிறுவனை அந்த ஆதினத்துக்குக் கொண்டுவந்தனர். அங்கு வந்ததும் அச்சிறுவன் அமைதியானான். தீய ஆவியின் ஆட்டமும் அடங்கியது. இதைக் கண்ட அந்த ஆதீனத் தலைவர், இவ்விடத்தில் புனிதர்கள் இருப்பதால்தான் தீய ஆவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பெருமையுடன் சொன்னார். அவ்வளவுதான். அந்தச் சிறுவனைவிட்டுச் சென்ற தீய ஆவி மீண்டும் அவனுக்குள் புகுந்து தனது வேலையைத் தொடங்கியது. முன்னய நிலைமையைவிட பின்னைய நிலைமை மோசமானது. இதைக் கண்ட அந்த ஆதீனத் தலைவர் தனது தவறுக்காக மனம் வருந்தி நோன்பிருந்து செபித்தார். அந்த ஆதீனத்திலிருந்த மற்ற துறவிகளும் சிறுவன் குணமாகும்வரைச் செபித்தார்கள். இவ்வாறு தனது தற்பெருமைக்காக வருந்தி மன்னிப்பு வேண்டிய ஆதீனத் தலைவர் புனித எலியத்தேரியுஸ்(Eleutherius). புனித எலியத்தேரியுஸ் அவர்கள், 585ம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள், உரோமையிலுள்ள புனித ஆண்ட்ரூ ஆதீனத்தில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.