2014-09-08 15:17:47

புனிதரும் மனிதரே - "அடிமைகளின் அடிமை" – புனித பீட்டர் கிளேவர்


தென் அமெரிக்காவின் கார்த்தஜேனா துறைமுகத்தை நோக்கி கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. துறைமுகத்தில் பல வர்த்தகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வாங்க வந்திருந்த பொருள்கள்... மனிதர்கள். ஆம், அந்தக் கப்பல் ஆப்ரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மனிதர்களை, மிருகங்களைப் போல் அடைத்துக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் பலர் கடல் பயணத்தில் உயிர் துறந்தனர். மீதம் இருந்த அடிமைகள், துறைமுகத்தில் ஏலத்தில் விற்கப்பட்டனர். அந்தச் சூழலில் 30 வயது இளம் அருள்பணியாளர் அந்த அடிமைகள் நடுவே சென்று, அவர்களுக்கு உணவும், நீரும் வழங்கினார். காயமுற்று, நோயுற்று இருந்தவர்களுக்கு மருந்துகள் வழங்கினார். அங்கிருந்த அடிமை வர்த்தகர்கள் அவரை வெறுப்புடன் வசைபாடினாலும், அவர் தன் பணியை நிறுத்தவில்லை. அந்த இளம் அருள் பணியாளரின் பெயர் பீட்டர் கிளேவர். ஸ்பெயின் நாட்டில் 1581ம் ஆண்டு பிறந்த பீட்டர், இயேசு சபையில் இணைந்து, மயோர்க்கா எனுமிடத்தில் இருந்த ஒரு கல்லூரியில் பயின்றார். அந்தக் கல்லூரியில் வாயில் காக்கும் பணியைச் செய்துவந்த அருள் சகோதரர் அல்போன்ஸ் ரொட்ரிகுவெஸ் அவர்கள், இளைஞன் பீட்டரின் ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மறைபரப்புப் பணி நாடுகளுக்குச் செல்லும்படி அவரைத் தூண்டினார். தன் 29 வது வயதில் தென் அமெரிக்கா சென்று அடிமைகள் மத்தியில் தன் பணிகளைத் துவங்கினார் பீட்டர். இவர் தன் இறுதி அர்ப்பணத்தை வழங்கியபோது, இயேசு சபையில் பொதுவாக வழங்கப்படும் ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் என்ற மூன்று வாக்குறுதிகளுடன், "அடிமைகளின் அடிமை" என்ற கூடுதல் வாக்குறுதியையும் இவர் இணைத்தார். 40 ஆண்டுகள் அவர் தொடர்ந்த இப்பணியினால், அடிமைகள் பலர் கிறிஸ்துவை ஏற்கும் வாய்ப்பு பெற்றனர். இவர் தன் பணியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான அடிமைகளை கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார். இவரது வாழ்வின் இறுதி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மிகுந்த நோயுற்று கிடந்தார். அடிமையாய் இருந்து விடுதலை பெற்ற ஒருவரை, இவரைக் கவனித்துக் கொள்ளும்படி இல்லத்தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரோ, பீட்டர் கிளேவர் அவர்களைக் கொடுமைப்படுத்தினார். இருப்பினும், பீட்டர் அவரைக் குறித்து யாரிடமும் புகார் சொல்லாமல் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார்.
1654ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி, தன் 73வது வயதில் இறைவனடி சேர்ந்த பீட்டர் கிளேவர் அவர்களையும், அவருக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மறைபரப்புப்பணி நாடுகளுக்குச் செல்லும் ஆவலைத் தூண்டிய அருள் சகோதரர் அல்போன்ஸ் ரொட்ரிகுவெஸ் அவர்களையும் 1888ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் புனிதர்களாக உயர்த்தினார். இப்புனிதரின் விழா செப்டம்பர் 09.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.