2014-09-08 16:02:18

திருத்தந்தை : உடன்பிறந்தோர் உணர்வு மற்றும் நீதியுடன்கூடிய அமைதி நிலவட்டும்


செப்.08,2014. வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு உக்ரேய்ன் பகுதிக்காகவும், லெசுத்தோ நாட்டுக்காகவும் செபிக்குமாறு தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரேய்னில் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் அமைதி உடன்பாட்டைக் கொணரும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அண்மை நாள்களில் காணமுடிகின்றது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீடித்த அமைதி விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
ஆப்ரிக்காவின் லெசுத்தோ நாட்டில் அமைதிக்கென அந்நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்துடன் தானும் இணைந்துகொள்வதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து வன்முறைகளையும் தான் கண்டிப்பதாகவும், அதேவேளை லெசுத்தோ நாட்டில் உடன்பிறந்தோர் உணர்வு மற்றும் நீதியுடன்கூடிய அமைதி நிலவ வேண்டும் என தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் 8ம் தேதி இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட ஆரோக்ய அன்னை திருவிழா அதாவது அன்னை மரியா பிறந்த நாள் விழா குறித்தும் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்கும்படி அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.